திருநெல்வேலி என்றதும் அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அல்வாவும் அரிவாளும்தான்.., அதே போல பல்வேறு அடையாளங்களை உள்ளடக்கியது நெல்லை மாவட்டம். குறிப்பாக நெல்லை மாநகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது ஈரடுக்கு மேம்பாலம். ஆசிய அளவில் புகழ்பெற்ற இந்த பாலம் நெல்லை நகரத்தையும், நெல்லை சந்திப்பையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரதான பாலமாக அமைந்துள்ளது. அதே போல சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து அமைக்கப்பட்டிருக்கும் ரயில்வே இருப்பு பாதைக்கு மேல் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிய கண்டத்திலேயே இருப்புப் பாதைக்கு மேலாக கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும், இந்தியாவில் கட்டப்பட்ட முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும் உடையது. குறிப்பாக 1969-ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதியால் பால வேலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் நாள் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. சுமார் 47 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் 700 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்டது. 26 ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதால் மேல் அடுக்கில் பேருந்துகள், கனரக வாகனங்கள் போன்ற பெரிய ரக வாகனங்களும், கீழ் அடுக்கில் சைக்கிள், இருசக்கர வாகனம், போன்ற இலகு ரக வாகனங்களும் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
திருக்குறளில் இரண்டு அடிகள் இருப்பது போல, இப்பாலத்தில் இரண்டு அடுக்குகள் இருப்பதால் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 'திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம்' என்று பெயரிடப்பட்டது. ஆனால் திருநெல்வேலி மக்கள் தங்கள் பேச்சு வழக்கில் 'ரெட்டை பாலம்' என்றே அழைத்தனர். அதனால் இன்றளவும் திருவள்ளுவர் ஈரடுக்கு பாலம் என்பதை விட ரெட்டை பாலம் என்றே அனைவராலும் அறியப்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளை கடந்து நிற்கும் நெல்லையின் அடையாளமான இந்த பாலம் ஆங்காங்கே சிதலமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கீழ் பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமலும் நடந்து செல்ல முடியாமலும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். அதோடு பாலத்தில் தண்ணீர் ஒழுகியும் காணப்படுகிறது. இதனால் அப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதோடு விரைந்து புதுப்பித்து வரும் சந்ததியினருக்கு அதன் பெருமையை விளக்கும் வகையில் அடையாளப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக நெல்லையில் அடையாளமான பல்வேறு பகுதிகளின் ஓவியங்களை பாலத்தின் மீது வரைந்து அதனை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்