தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் நெல் அறுவடைக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் இயந்திரங்கள் கிடைக்கவில்லை அதிக கட்டணம் கொடுத்து அறுவடை செய்கின்றனர் என்றனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் அறுவடை இயந்திர தேவைக்கு முன்பணம் செலுத்தி இருக்க வேண்டும் என்றனர், அதற்கு விவசாயிகள் தென்காசி மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரம் எங்கே உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய ஆட்சியர் தென்காசி மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்கள் இல்லை என்றார். உடனடியாக குறிப்பிட்ட விவசாயிகள் அதிகாரிகள் ஏன் தவறான தகவல்களை தெரிவிக்கிறார்கள் என கேள்வி எழுப்பினர்.




தொடர்ந்து பேசிய விவசாயிகள், செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் குளக்கரைகள்,வயல்வெளிகளில் குப்பைகள் எரிக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது என்றனர். தொடர்ந்து அதிகாரிகள் கூறும்போது, பருவமழை பெய்யாதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வறட்சி நிவாரணத்துக்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த, அவர்கள் மாவட்டத்தில் சராசரியாக 99 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் சாகுபடி ஆகும். ஜனவரி மாதம் முதல் இதுவரை 89 ஆயிரம் ஹெக்டேர்   பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தரமற்ற விதைகள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.




அப்போது குறுக்கிட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன்,  செய்தியாளர்கள் வெளியே செல்லலாம்? என்ன எதிர்பார்க்கிறீர்கள்? கூட்டம் அலுவலக ரீதியானது கூட்டம் தொடங்கியதும் செய்திகள் சேகரித்துவிட்டு வெளியே சென்று விட வேண்டும் என்றார். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது பேசிய ஆட்சியர் கூட்டத்தில் யாரெல்லாம் இருக்க வேண்டும் யார் இருக்கக்கூடாது என்பதை நாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் நீங்கள் முடிவு செய்யக்கூடாது என்றார்.


அரங்கத்தில் போதிய நாற்காலிகள் இல்லாததால் பல விவசாயிகள் ஓரமாக நின்று கொண்டு இருந்தனர், அவர்களை இருக்கையில் அமருமாறு ஆட்சியர் கூறினார், உட்காருவதற்கு போதிய நாட்களில் இல்லை என்று விவசாயிகள் கூறினர். அப்போது பேசிய ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் உட்கார விருப்பமில்லை என்றால் வெளியே சென்று விடுங்கள்,இங்கே நின்று கொண்டு ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என்றார். இதனால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் ஆட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை வெளியே செல்லுமாறு எப்படி கூறலாம் செய்தியாளர்கள் தான் விவசாயிகளின் கோரிக்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர், அவர்களை வெளியேறுமாறு கூறுவது தவறானது. செய்தியாளர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் அவர்களை வெளியேற்றினால் விவசாயிகள் அனைவரும் வெளியேறுவோம் என்று ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகளும் காவல்துறையினரும் விவசாயிகளை சமாதானப்படுத்தி கூடுதலாக இருக்கை கொண்டுவரப்பட்டு தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.


சிவகிரி பகுதியில் விவசாயிகள் கட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்த பயிர்களை காட்டி பேசும்போது காட்டுப்பன்றிகள் வனவிலங்குகள் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளில் அகழிகள் வெட்டுவதால் பயனில்லை. ஏராளமான காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து உள்ளன,அவற்றை விரட்டிவிட்டு அகழிகள் அமைக்க வேண்டும். காட்டுபன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றனர். புதிய ஆட்சியரின் முதல் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டமே வாக்குவாதத்துடன் நிறைவடைந்தது