நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாலகன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். (வயது 54), இவர் முக்கூடல் மெயின் ரோட்டில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் அவருடைய வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு  வீட்டிற்குள் சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்து பார்த்தபோது அவரது இருசக்கர வாகனம் மாயமானது.


இது தொடர்பாக ரமேஷ் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதன் பேரில் முக்கூடல் உதவி காவல் ஆய்வாளர் ஆக்னல் விஜய் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் முக்கூடல் காமராஜர் தெருவை சேர்ந்த செல்வராஜா (46) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது  தெரியவந்தது. அதைத்தொடர்ந்து உதவி காவல் ஆய்வாளர் ஆக்னல் விஜய், செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் திருடிய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.




இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ரமேஷின் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டே செல்வராஜா அவரது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார், அதோடு இருசக்கர வாகன உரிமையாளர் ரமேஷின் கடைக்கே நேரடியாக சென்று கருப்பு நிற பெயிண்ட், பிரஸ் உள்ளிட்டவற்றை வாங்கி வந்துள்ளார். பின் வீட்டில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற இருசக்கர வாகனத்தை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார். அதோடு மட்டுமின்றி வாகனத்தில் இருந்த நம்பர் பிளேட்டை கழட்டி விட்டு கையால் எழுதி நம்பர் பிளேட்டை மாற்றி வைத்துள்ளார். தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் சந்தேகமடைந்த காவல்துறையினரிடம் செல்வராஜா மாட்டிக் கொண்டது தெரிய வந்துள்ளது இருசக்கர வாகனத்தை  திருடியவர் அதன் உரிமையாளரிடமே சென்று பெயிண்ட் வாங்கி வாகன நிறத்தை மாற்றி மாட்டிக் கொண்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண