நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர் அரசு மருத்துவமனை ஒரு முக்கிய மருத்துவமனையாக விளங்கி வருகிறது. குறிப்பாக இங்கு மகப்பேறு முதல் பிணவறை என அனைத்துமே இயங்கி வருகிறது. குறிப்பாக கேசவநெரி, சண்முகபுரம், ராஜபுதூர், பண்டார குளம், சமத்துவபுரம் என வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அனைவருமே இந்த மருத்துவமனையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
40-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்பட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக அமைய இருக்கிறது. சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே தெரிவிக்கையில் ரூ.31 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி விரைவில் துவங்கும். நெல்லை மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் செயல்பட்டு வந்த நிலையில் இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பின், நெல்லை மாவட்டத்துக்கு வேறொரு நகரத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த வாய்ப்பு வள்ளியூருக்கு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், விரைவில் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. அதேபோல அனைத்து மருத்துவ வசதிகளுடன் போதுமான மருத்துவர்கள், பணியார்களுடன் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் சரியாக பணிக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழும்பி உள்ளது. அப்படியே பணிக்கு வந்தாலும் மருத்துவமனையில் இருப்பதில்லை. செவிலியர்கள் மட்டுமே இருக்கின்றனர். இங்கு பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்திருப்பதால் பணி நேரத்தில் தங்களது சொந்த கிளிக்கில் பணியாற்றி வருகின்றனர் எனவும் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போது காய்ச்சல் பரவி வரும் நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சைக்கு வரும் பலர் மருத்துவர்கள் இன்றி செவிலியர் மட்டுமே பணியில் இருப்பதால் உரிய சிகிச்சை பெற முடியாமல் திரும்பி செல்லும் சூழல் இருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த கெளசல்யா கூறும்பொழுது, ''சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இந்த மருத்துவமனையை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மருத்துவர்கள் பாதி நேரத்திற்கும் மேல் பணியில் இருப்பதில்லை, அவசர சிகிச்சைக்கு கூட மருத்துவர்கள் இல்லாத சூழல் இருப்பதால் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணியில் இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ''இங்கு 3 மருத்துவர்கள் உள்ளனர். தற்போது இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த மருத்துவமனையை பொறுத்தவரை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையும்தான் பணி நேரம்.
மீதமுள்ள நேரம் 'On Call Duty'.. அப்படியென்றால் ஒரு அவசர தேவைக்கு எந்த நேரமானால் மருத்துவர்கள் செல்ல வேண்டும் என்பது தான். அப்படி அவசர தேவை என்று போன் வந்தால் உடனே சென்று விடுவோம். கடந்த 2007 இல் இருந்து தற்போது வரை அப்படிதான் இயங்கி கொண்டிருக்கிறது. இதுதான் அரசின் சட்டமும்.. தலைமை மருத்துவமனையாக மாறிய பிறகுதான் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருப்பர். இது இங்குள்ள மக்களுக்கும், நோயாளிகளுக்கும் தெரிவது இல்லை'' என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..