தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 72 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர், இதன்படி நெல்லை மாவட்டத்தில் நில அளவை அலுவலகம் சங்கம் சார்பில் இன்று காலை முதல் போராட்டம் தொடங்கியது. போராட்டத்தை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி மாநில பொருளாளர் ஸ்டேன்லி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் நெல்லை மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் மணிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். களப் பணியாளர்களின் பணி சுமையை குறைத்து பணியை முறைப்படுத்த வேண்டும், திட்ட பணிகளை மாவட்ட அளவில் தனி உதவி இயக்குனர் தலைமையில் ஏற்படுத்த வேண்டும், டிஎன்பிசி மூலம் எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதி அடிப்படையிலேயே நில அளவர் பணி நியமனத்தை நிரப்ப வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,
ஊழியர்களின் விரோத போக்கை கடைப்பிடிக்கும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு அலுவலகம் வெறிச்சோடியது. நெல்லையில் நடந்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நிலவளவை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் தோழமை சங்கங்களுடன் இணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து மாநில பொருளாளர் ஸ்டேன்லி கூறும் பொழுது, தமிழ் நாடு நில அளவை துறையில் உள்ள பணிச்சுமையை குறைக்க வேண்டும், ஒரே நேரத்தில் பல்வேறு அதிகாரிகள் பல்வேறு வேலைகளை கொடுக்கின்றனர், இதனால் மன நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகின்றனர், இதனை குறைக்க நில அளவை துறையில் இருக்கக்கூடிய காலியான இடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும், லைசென்ஸ் சர்வேயர் முறையை ஒழிக்க வேண்டும், டிஎன்பிஎஸ்இ மூலம் எடுக்காமல் இவர்களாகவே அரசுக்கு தவறான வழிகாட்டுதலை கொடுத்து கொண்டு இருக்கின்றனர், இதனை காரணமாக வைத்து நான்கு கட்ட இயக்கங்களை நடத்தியிருக்கிறோம், பேச்சுவார்த்தை பலனிக்காத நிலையில் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்து உள்ளோம் என்று தெரிவித்தார்.