நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கரீம் நகரை சேர்ந்தவர் முகமது அசன், தையல் தொழில் செய்து வரும் இவரது 15 வயது மகன் அப்சர்.  பள்ளி விடுமுறை நாள் என்பதால் அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர். மேலும் அவர்கள் விளையாடும் பகுதிக்கு அருகேயே தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மிகப்பெரிய கிணறும் ஒன்றும் அமைந்துள்ளது. தோட்டத்தை கிருஷ்ணன் என்பவர் பராமரித்து வந்துள்ளார்.


இந்த நிலையில்  அப்சர் இன்று மாலை  கிருஷ்ணனின் மகன் தேவராஜ் மற்றும் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது பந்து கிணற்றில் விழுந்துள்ளது.  அதனை எடுக்க அப்சருடன் சேர்ந்து நான்கு பேர் தண்ணீரில் குதித்துள்ளனர்.  பின் மற்ற மூன்று சிறுவர்களும் கிணற்றிலிருந்து வெளியே வந்த நிலையில் அப்சர் மட்டும் நீரில் மூழ்கி உள்ளார். உடனடியாக மற்ற சிறுவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தகவலை தெரிவித்துள்ளனர். பின் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள்  சேர்ந்து கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியே எடுத்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.




அதோடு நீரில் மூழ்கிய சிறுவனுக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள அப்பகுதி மக்களும் அங்கு திரண்டனர். இந்த நிலையில் சுமார் மூன்று மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவன் அப்சர் சடலமாக மீட்கபட்டார். இதனை கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதனால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவியது. தொடர்ந்து சிறுவனின் உடலை மீட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர் மற்றும் காவலாளியிடம் மேலப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு கிணறு தோண்டியதில் ஏதேனும் முறைகேடுகள் இருக்கும் பட்சத்தில் தோட்ட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.. கிரிக்கெட் விளையாடிய சிறுவன் பந்தை எடுக்க கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண