தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்னும் சில நாட்களில் குறிப்பாக ஜீன் மாதம் துவங்கியதும் குற்றால சீசன் தொடங்கும். அந்த நேரங்களில் குற்றாலத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் இந்த சீசன் காலங்களை எதிர்பார்த்து தான் அங்குள்ள வியாபாரிகள் வாழ்ந்து வருகின்றனர்.


குறிப்பாக செங்கோட்டை அருகே வல்லம் பகுதியை சேர்ந்த சுடலை என்பவரும் குற்றாலத்தில் பழங்கள் வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். அதுவும் கேரளாவில் இருந்து ரம்டான் பழங்களை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். அவர் இன்று குற்றாலம் அருகே வல்லம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 


விசாரணையில், குற்றாலம் சீசன் துவங்கவிருப்பதை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக ரம்டான் பழங்களை ஏலம் எடுப்பதற்காக சுடலை கேரளாவிற்கு சென்றுள்ளார். அப்பொழுது, அதே ஏலத்தில் வல்லம் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரும் பங்கேற்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே ஏலத்தில் கடுமையான போட்டி நிலவியதாக கூறப்படுகிறது. அப்போது சுடலை ரம்டான் பழத்தை கொள்முதல் செய்வதற்கான ஏலத்தை பெற்றுள்ளதாக தெரிகிறது.  இதனால், ஆத்திரம் அடைந்த நிலையில் காளிதாசுக்கும், சுடலைக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.


இந்த நிலையில் தான் இன்று குற்றாலம் அருகே உள்ள வல்லம் பகுதியில் நின்று கொண்டிருந்த சுடலையை, காளிதாசும் அவர் நண்பரான வேறு ஒருவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில், படுகாயம் அடைந்த சுடலை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலே துடிதுடித்து உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து குற்றாலம் போலீசார் சுடலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில், சுடலையை வெட்டி படுகொலை செய்த காளிதாஸ் என்பவர் குற்றாலம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். வியாபார போட்டி காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண