நெல்லை பாளையங்கோட்டையில் அரசினர் சித்த மருத்துவ கல்லூரி 50 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது.  மாநிலத்தின் முதல் சித்த மருத்துவ கல்லூரி என்ற பெருமையுடன் இயங்கினாலும் போதுமான அடிப்படை வசதிகளோ, மூலிகை பண்ணைகளோ இல்லாமல் பெயரளவிலேயே இந்த கல்லூரி செயல்பட்டு வருகிறது.  ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி அமைய வேண்டும் என்ற விதி உள்ள  போதிலும் நான்கரை ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. இளநிலை சித்த  மருத்துவ படிப்பில் ஆண்டுதோறும் நூறு மாணவ, மாணவியர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இக்கல்லூரியில் 40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தார். இதனையடுத்து இந்த கல்லூரியில் இந்திய சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ துறைகளில் இயக்குனர் கணேஷ் தலைமையிலான குழுவினர் சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.


கல்லூரியின் தரம், கட்டமைப்புகள், ஆய்வகங்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மேம்பாட்டிற்காக தமிழக அரசு 40 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. அதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். சித்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பல கட்டிடங்கள் பழுதாகி சிதிலமடைந்து காணப்படுகிறது. இங்கு பல கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. அதனை அகற்றிவிட்டு புதிய  கட்டிடங்கள் கட்டப்படும். பொதுவாக சித்த மருத்துவக் கல்லூரி அமைய ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால் இங்கு நான்கரை ஏக்கர் மட்டுமே உள்ளது. அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தையும் சித்த மருத்துவ கல்லூரிக்கு வழங்க வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அது பரிசீலனையில் உள்ளது. வண்ணார்பேட்டையில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.




தற்போது இளநிலை சித்த மருத்துவ படிப்பில் இந்த கல்லூரியில் 100 மாணவர்கள் ஆண்டுதோறும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இதனை 60 இடங்கள் உயர்த்தி 160 இடங்களாக மாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகள் கொண்டு வரும் வகையில் அவற்றை அமைக்க 50 ஏக்கர் நிலப்பரப்பை அரசிடம் கோரியுள்ளோம். அவ்வாறு அமைக்கப்பட்டால் ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட உயர் படிப்புகள் இங்கே கொண்டுவர முடியும். குற்றாலம், பாபநாசம் பகுதிகளில் மூலிகை பண்ணைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இந்த வளர்ச்சிப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்" என்று தெரிவித்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண