கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அஸ்வின் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லையை சேர்ந்த 17 வயதான சிறுவன் அஸ்வின் தனது குடும்பத்தாருடன் பழைய குற்றால அருவியில் குளிக்க வந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். 


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டநிலையில், சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் அஸ்வினின் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


அந்த வீடியோவில் சிறுவன் சில அடி நீரில் அதிவேகமாக இழுத்து செல்லப்பட்டது தெளிவாக தெரிந்தது. இப்படியான சூழ்நிலையில், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெள்ள பெருக்கில் அடித்து செல்லப்பட்ட அஸ்வின், சுதந்திர போராட்டத்திற்காக போராடி உயிர்நீத்த வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, வ.உ.சிதம்பரனாரின் பேத்தியான செண்பகவள்ளியின் மகளான சிதம்பரத்தின் மகன் குமாரின் மகன்தான் இந்த அஸ்வின் என்று தெரியவந்துள்ளது. 


சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு எழுதி 11-ம் வகுப்புக்கு செல்லவிருந்த அஸ்வின், கோடை விடுமுறை காரணமாக தென்காசி அடுத்த மேலகரத்தில் உள்ள தனது உறவினர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, அனைவரும் குடும்பத்துடன் குற்றாலத்திற்கு சென்றபோது இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. அஸ்வினின் தந்தையான குமார் தற்போது பேங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.


பொதுமக்களுக்கு எச்சரிக்கை: 


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மற்றும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மணிமுத்தாறு அருவி, தலையணை, மாஞ்சோலை, நம்பி கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும். 


மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள் மற்றும் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.  பொதுமக்கள் தாமிரபரணி ஆறு, கடனா, சிற்றாறு, நம்பியாறு, அனுமன் நதி உள்ளிட்ட  ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள், காட்டாறுகள் மற்றும் மழை காரணமாக ஏற்படும் தற்காலிக அருவிகள் என எந்த ஒரு நீர்நிலைக்குள்ளும் இறங்க வேண்டாம் என்றும் கால்நடைகள், வாகனங்களையும் இறக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், கடற்கரை ஓரங்களில் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


அதேபோல், திருநெல்வேலியை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பிரதான அருவி, பழைய குற்றால அருவிகளிலும், அந்த நகரங்களில் உள்ள பிற அருவிகள் மற்றும் அணைக்கட்டு பகுதிகளிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று (மே 20ம் தேதி) ரெட் அலர்ட் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.