நெல்லை மாநகரப் பகுதிக்குட்பட்ட பாளையங்கோட்டையை அடுத்த சாந்தி நகர் 24-வது தெருவை சேர்ந்தவர் ராஜன். இவர் அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் ராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவரது மனைவி இந்திரா மட்டும் அந்த வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் பத்தாவது தெருவில் இந்திராவின் மகள் வசித்து வருகிறார்.  இதனால் அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.


இந்த நிலையில் நேற்று தனது  வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டுக்கு சென்று உள்ளார். பின் வழக்கம்போல் இன்று மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பி  வந்தபோது வீட்டின் முன்பக்க  கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 14 சவரன் நகைகள் மற்றும் 30 ஆயிரம் பணம் மாயமானது தெரியவந்தது.




இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு  நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ஜூலியட் தலைமையிலான போலீசார் சம்பவத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வீட்டின் உரிமையாளர் இந்திராவிடமும் விசாரணை மேற்கொண்டனர். 


தொடர்ந்து மோப்ப நாய் புளூட்டோ வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் ஆளில்லாத வீடுகளின் பூட்டை உடைத்து நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக நடைபெறாமல் இருந்தது. மேலும் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் மீண்டும் தலை தூக்கி உள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் 14 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.