நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றியல் இருந்து வெள்ள காலங்களில் கடலில் கலக்கும் 13 மில்லியன் கன அடி உபரி நீரை நாங்குநேரி , ராதாபுரம் உள்ளிட்ட வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கலைஞர் தமிரபாரணி ஆறு, நம்பியாறு மற்றும் கருமேனியாறு ஆகியவற்றை இணைத்து நதிநீர் இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார், அப்போது இந்த திட்டத்திற்கு 369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பணிகளில் தொய்வு ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டது. தற்போது முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடரந்து நதிநீர் இணைப்புத் திட்டப்பணிகளை விரைவு படுத்த உத்தரவிட்டார். ஏற்கனவே 3 நிலைகள் பணிகள் முடிக்கப்பட்டு 4- வது நிலை பணிகள் நடந்து வருகிறது.
இதில் நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நதிநீர் இணைப்பு திட்ட கால்வாயின் குறுக்கே மேல்பட்ட பாலம் 6 வழிச்சாலைக்கு திட்டமிடப்பட்டு 17.09 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பாலப்பணிகள் தொடங்கப்பட்டு அதுவும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் இந்த பணிகளை துரிதப்படுத்தும் வகையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மற்றும் திட்ட அதிகாரிகள் பாலத்தின் கட்டுப்பாணப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகள் காலதாமத்திற்கான காரணம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார், பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
”2006 ஆண்டு கலைஞர் ஆட்சியில் இருந்தபோது ஆண்டுதோறும் தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 20 முதல் 50 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து வறண்ட பகுதியான நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, உடன்குடி திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு திருப்பி விட தாமிரபரணி ஆறு , கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகியவற்றை இணைத்து நதிநீர் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பீடு 369 கோடி ரூபாய், இதன்படி கடந்த 2009 ஆம் ஆண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டுக்குள் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதி பணிகள் முடிவடைந்தது, மீதி பணிகள் கடந்த 10 ஆண்டுகள் தொய்வு ஏற்பட்டு இருந்தது, இதனால் திட்டம் முழுமையடையவில்லை, தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் நெல்லை –கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் பொன்னாக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 17.9 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. கடந்த ஜீன் மாதம் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டது, பணி ஆரம்பித்து இன்று வரை 10 மாதங்கள் ஆகிறது, ஆனால் இதுவரை இந்த பணிகள் முடிவடையாமல் மிக மிக ஆமை வேகத்தில் நகர்கிறது, இதை எடுத்துள்ள ஒப்பந்த காரரால் தாமதம் ஏற்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
தற்போது இதற்கான திட்ட இயக்குனரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து உண்மை நிலையை அறிந்துள்ளார். அவர் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். எனவே இந்த பணிகள் வரும் அக்டோபர் மாதத்தில் முடிவடையும்” என தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டம் 4 நிலைகளாக நடந்து வருகிறது.
பாலப் பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்தகாரர் 7 பணிகளை எடுத்து செய்து வருகிறார், அதிலும் தொய்வு ஏற்பட்டு 20 சதவீத பணிகள் கூட முடிவடையவில்லை, இது வேதனைக்குரியது, எனவே அதிகாரிகள் இதில் உரிய நடவடிக்கை எடுத்து திட்டப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார், இந்த நிகழ்வின் போது திட்ட இயக்குனர் நாகராஜன் , முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்தியானந்த், மாவட்ட கவுன்சிலர் கனகராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர் .