தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி, கீதா செல்வி. இவர்களுக்கு விக்னேஷ், பிரகாஷ் என்று இரு மகன்கள் உள்ளனர். இதில் விக்னேஷ் கோவையில் ஆட்டோ மொபைல்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மாடசாமி கூலி வேலையும் கீதா செல்வி வீட்டில் ஜவுளி மற்றும் மாவு வியாபாரம், துணி தைத்து கொடுப்பது உள்ளிட்ட சிறு தொழில்களையும் செய்து வருகிறார்.
இவர்களது இளைய மகனான பிரகாஷ் பி.காம் முடித்துவிட்டு கடந்த ஓராண்டாக வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ள பிரகாஷ் தூத்துக்குடியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதையும் போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பிரகாஷ்க்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் தெரியாமல் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். ஏற்கனவே இவரது தாயார் செய்துவந்த சிறு தொழிலில் வரவு செலவு வங்கி கணக்கு பிரகாஷ் பெயரிலேயே இருந்துள்ளது. இதனால் வியாபாரத்திற்கு கொடுக்கவேண்டிய பணத்தை வங்கியில் இருந்து ஆன்லைன் ரம்மி விளையாட பிரகாஷ் பயன்படுத்தி உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதனை கண்டறிந்த அவரது தந்தை மாடசாமி பிரகாஷை கண்டித்துள்ளார். ஆனாலும் பிரகாஷுக்கு ஆன்லைன் மோகம் குறையவில்லை. அக்கம்பக்கத்தில் நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடி இருக்கிறார். இந்த வகையில் லட்சக்கணக்கில் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இதில் தனது நண்பர் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் திருப்பித் தர வேண்டிய நிலையில் தனது தாயாரிடம் அவசரமாக தனக்கு பத்தாயிரம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரது தாயார் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் பிரகாஷின் தாயார் வீட்டில் இல்லாதபோது பிரகாஷ் வீட்டில் உள்பக்கமாக கதவை பூட்டி விட்டு தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அவரது தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினர் பிரகாஷை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பிரகாஷ் மரணம் அடைந்தார். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தருவைகுளம் ஆய்வாளர் ஆனந்த தாண்டவர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார். பிரகாஷின் தந்தை மாடசாமி கூறுகையில், தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். தங்களது மகன் இறப்பே கடைசியாக இருக்க வேண் டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவருடன் கிரிக்கெட் விளையாடும் நண்பரான பிரகாஷ் என்பவரும் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உள்ள நண்பர் பிரகாஷ். ஆனால் அவரும் கூட இதுபோன்ற ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விட்டார். இதனை கருத்தில் கொண்டு இதுபோன்று தற்கொலைகள் தொடராமல் இருக்க தமிழக அரசு உடனடியாக நிரந்தரமாக இதுபோன்ற ஆன்லைன் ரம்மி விளையாட்டு உள்ளிட்ட பணம் இழக்கக்கூடிய விளையாட்டுகளை தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)