வற்றாத ஜீவநதி தாமிரபரணி:
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஓடும் வற்றாத ஜீவநதி தாமிரபரணியாகும். பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு பல்வேறு மூலிகைகளை தழுவி பாண தீர்த்தம், கலியாண தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களை கடந்து பாபநாசம் வழியாக நெல்லை மாநகருக்குள் சென்று பின் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே சங்குமுகம் கடலில் கலக்கிறது. பல்வேறு சிறப்புகளை பெற்ற தாமிரபரணி 5 மாவட்டத்தின் குடிநீருக்கு ஆதாரமாகவும், நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தின் விவசாயத்திற்கு ஆதாரமாகவும் விளங்குகிறது. மேலும் துணை ஆறுகளான காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு, சிற்றாறு ஆகிய ஆறுகள் தாமிரபரணி வழியாக பாய்ந்தோடுகிறது.
பருவமழையால் பயனடையும் தாமிரபரணி:
தென்மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் வடகிழக்கு பருவமழை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பயனளிக்கும் விதமாக அமையும். தென்மேற்கு பருவமழையால் போதிய அளவு பலன் கிடைக்காவிடிலும், வடகிழக்கு பருவ மழையை நம்பியே விவசாயிகள் விவசாய பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்வர். அவ்வாறு பெய்யும் மழையில் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீரானது தாமிரபரணி வழியாக கடலில் சென்று வீணாக கலந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும், உபரி நீரை சேமிக்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகளும் ஒரு புறம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க வடகிழக்கு பருவமழையினால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அந்த நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வரத்தை பொறுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படுவர். எந்த ஒரு பாதிப்பையும் மக்களுக்கு ஏற்படுத்தாதவாறு தாமிரபரணி தாயே அனைத்தையும் தாங்கிக் கொள்வாள் என நெல்லை மக்கள் மார்தட்டுக் கொள்ளும் பெருமையுடையது தாமிரபரணி ஆறு. ஆனால் இந்த வருடம் தாமிரபரணியால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்தும், சேதங்களிலிருந்தும் மீளமுடியாமல் மக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தாமிரபரணி வெள்ளக்காடான கதை:
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. அதன்படி கடந்த டிச 17 ஆம் தேதி முதல் வரலாறு காணாத அளவில் இரண்டு நாட்கள் விடாமல் மழையானது பெய்து வந்தது, இதனால் அணைகள், குளங்கள், ஆறுகள் என அனைத்தும் நிரம்பின, தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, குறிப்பாக அணையில் இருந்து வெளியேறிய உபரி நீர், கிளையாறுகளில் இருந்து வரும் நீர், நிரம்பிய மற்றும் உடைந்த குளங்களில் இருந்து வரும் தண்ணீர், மழைநீர் என அனைத்தும் தாமிரபரணி ஆறு வழியாக கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. சுமார் 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தாமிரபரணி ஆற்றில் சென்றது. மக்கள் எதிர்பாராத அளவில் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் நேரம் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.. இதனால் நெல்லையின் பல பகுதிகள் குறிப்பாக நெல்லை பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனி, பழைய பேட்டை, டவுண், அதே போல நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை, உடையார்பட்டி, மீனாட்சிபுரம், கைலாசபுரம், குறுக்குத்துறை, சிஎன்கிராமம், சன்னியாசிகிராமம் உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதனால் மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டது. ஒரு சிலர் அருகில் உள்ள வீடுகளிலும், ஒரு சிலர் மாடிகளிலும் தஞ்சம் புகுந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். வரலாற்றில் இல்லாத அளவிற்கு 17 ஆம் தேதி ஒரே நாளில் பாளையங்கோட்டையில் 90 செமீட்டரும், மூலைக்கரைப்பட்டியில் 20 செ.மீட்டரும், அம்பாசமுத்திரத்தில் 13 செமீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 14.7 செமீட்டர் மழையும், மணிமுத்தாறில் 13.5 செமீட்டர் மழையும் பெய்துள்ளது. நாங்குநேரியில் 18.6 செமீ, பாபநாசத்தில் 14.3 செமீ, ராதாபுரத்தில் 19.1 செமீ, திருநெல்வேலியில் 10.5 செமீ, சேர்வலாறு அணை பகுதியில் 9.8 செமீ, களக்காட்டில் 16.2 செமீ, கொடிமுடியாறு அணையில் 15.4 செமீ, நம்பியாறு அணையில் 18.5 செமீ மழை பெய்துள்ளது. அதன் பின்னரும் கனமழையானது தொடர்ந்து பெய்து வந்தது. 5 அடி முதல் 10 அடி வரை பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் நீரின் இழுப்பு தன்மையும் அதிகமாக இருந்தது. இதனால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதிலும் பல இடங்களில் சிரமங்கள் ஏற்பட்டன. மின்சாரம் தடைபட்டது. தகவல் தொடர்பு தடைபட்டது. மக்கள் செய்வதறியாது இரண்டு நாட்கள் சிரமங்களை அனுபவித்தனர். அதன்பின் வெள்ளம் சிறிதளவு குறைந்த பின்னரே மீட்பு படையினரும் மக்களை எளிதாக சென்றடைய முடிந்தது. நெல்லையை பொறுத்தவரை 13 பேரும் தூத்துக்குடியில் 22 பேரும் மழை வெள்ளத்தால் தற்போது வரை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
92 மற்றும் 23 களில் ஏற்பட்ட வெள்ளம்:
இதே போன்று 1992 இல் தாமிரபரணி நவம்பர் 13 தேதி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கும் விக்கிரமசிங்கபுரம் திருவள்ளுவர் நகரில் இரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களின் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரில் சிக்கி 17 உயிரிழந்தனர். அந்த வெள்ளத்தை ஒப்பிடும் போது இந்த அளவிற்கு சேதங்களை ஏற்படுத்தவில்லை என்றும், தற்போதைய வெள்ளம் நெல்லை மாவட்டத்தையே புரட்டி போட்டு விட்டது என்றும் கூறப்படுகிறது.
2023 டிச 17,18 ஆகிய நாட்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை போன்றே 100 வருடங்களுக்கு முன்பு 1923-ஆம் ஆண்டு டிச 17,18 ஆம் தேதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக நாளிதழ் ஒன்றில் வெளியான தகவல்கள் மூலம் தெரிய வருவதாக செய்திகள் வைரலாக வருகிறது. இந்த வெள்ளத்தில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டதோ அதே பாதிப்பு அதே தேதிகளில் ஏற்பட்டதாகவும் அந்த நாளிதழில் வெளிவந்த செய்தி மூலமாக தெரியவந்துள்ளது