நெல்லை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா இன்று ஆய்வு செய்தார். குறிப்பாக நெல்லை சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் தண்ணீரில் மூழ்கியுள்ள உறை கிணறுகளையும், உறை கிணறுகளின்  நீரேற்றும் நிலையங்களையும் பார்வையிட்டார்.


மேலும் கங்கைகொண்டான் சிப்காட்  வளாகத்திற்கு செல்லும் குடிநீர் பைப் லைன் பாலம் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அதன் பின் சிவந்திபட்டியில் உள்ள நெடுஞ்சான் குளம் உடைப்பையும் பார்வையிட்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களை  சந்தித்த அவர் கூறும் பொழுது, போர்க்கால அடிப்படையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. 155 இடங்களில் சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 150 இடங்களில் சரி செய்யப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் போர்க்கால அடிப்படையில் போய்க்கொண்டு இருக்கிறது.





தாமிரபரணி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்பட்டு வரும் மிகப்பெரிய 101 தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களில் 70 திட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தற்பொழுது 34 திட்டங்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மீதி உள்ள திட்டங்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது., மேலும் தாமிரபரணி ஆற்றில் உள்ளாட்சித் துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த உறை கிணறுகளின் பாதிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதே நேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த குடிநீர் லாரிகள் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வேறு மாவட்டங்களில் இருந்து 85 குடிநீர் லாரிகள் வந்துள்ளன. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் பாசன குளங்களில் பல்வேறு உடைப்புகள் ஏற்பட்டதினால் அவற்றை சரி செய்து அவற்றை நிரப்பும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கனமழை பாதிப்பு எதிரொலியாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இதுவரை 328 குளங்கள் உடைந்துள்ளது. உடைந்துள்ள குளங்களையும்  சீர்செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.




நெல்லை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது என தெரிவித்தார். அதனை சரிசெய்து பாபநாசம், மணிமுத்தாறு பாசன கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாஞ்சோலை மலைக்கிராமத்திற்கு போக்குவரத்து வசதி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பால் இதுவரை 13 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 22 பேரும் என மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. எவ்வளவு பாதிப்பு என்பது தொடர்பான கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்ற பின் வங்கிகள் மூலமாக கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அவர்களுக்கு காப்பீடு திட்டம் இருந்தால் அதன் மூலமும் பணம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.