ஊருக்குள் புகும் வன விலங்குகளால் மக்கள் அச்சம்:


நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் கரடி, சிறுத்தை, மான், மிளா, காட்டுப்பன்றி, சிங்கவால் குரங்குகள், யானைகள், காட்டெருமைகள் போன்ற வன விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் மலையடிவாரத்தையொட்டிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் இவ்விலங்குகள் அவ்வப்போது புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதோடு சில நேரங்களில் ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகின்றன. குறிப்பாக கரடி, சிறுத்தை, யானை ஆகியவை அடிக்கடி ஊருக்குள் புகுவதால் மலையடிவார கிராமப்பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தென்காசி அருகே ஒற்றை யானை ஒன்று ஊருக்குள் புகுந்த  நிலையில் தீவிர போராட்டத்திற்கு பின் அதனை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அனுப்பினர். அதே போன்று கடந்த  ஓரிரு வாரங்களுக்கு முன்பு மேக்கரை பகுதிகளில் ஆடு, மாடுகளை வேட்டையாடி வரும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். மேலும் அதனை பிடிக்க கூண்டும் வைக்கப்பட்டது. 


சங்கரன்கோவிலில் உலா வரும் சிங்கம்:


இது ஒருபுறமிருக்க தற்போது நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரடி நடமாட்டம் என்பது சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. இது குறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே இந்த விலங்குகளால் நெல்லை, தென்காசி மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில் தற்போது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிங்கம் ஒன்று உலா வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதோடு தென்மலையிலிருந்து முக்குரோடு மார்க்கமாக ராஜபாளையம் சங்கரன்கோவில் செல்பவர்கள் அங்கிருந்து திரும்புவோர் கவனத்திற்கு, அப்பகுதியில் சிங்கம் ஒன்று வழிதவறி வந்துள்ளது. அதனை வனத்துறை பிடிக்கும் வரையில் சற்று பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் பயணம் செய்யவும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 


வனத்துறை, காவல்துறை விளக்கம்:


இது தென்காசி மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக வனத்துறையினரிடம் விளக்கம் கேட்டபோது, சிங்கமானது தமிழகத்தில் இல்லை எனவும், சங்கரன்கோவில் பகுதியில் இந்த வீடியோ பதிவிடப்படவில்லை எனவும், ஏனெனில் அந்த பெட்ரோல் பங்கில் உள்ள விளம்பர பலகைகளில் வடமொழி எழுத்துக்கள் உள்ளதால் அது நிச்சயமாக தமிழகத்தில் எடுக்கப்பட்டது இல்லை, குஜராத்தில் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் இது தொடர்பாக எந்த விதமான அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும், இது போன்ற பொய் வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே போல போலியான தவறான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் எனவும், மீறி பதிவிடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.