Tenkasi, Chennai Direct Trains: 100 ஆண்டுகள் பழமையான தென்காசி - திருநெல்வேலி ரயில் பாதை, அகலப்பாதையாக மாற்றப்பட்டு 13 ஆண்டுகள் ஆன பிறகும், தென்காசியில் இருந்து மாநிலத்தின் தலைநகர் சென்னைக்கு இன்று வரை தினசரி நேரடி ரயில் சேவை இயக்கப்படாமல் உள்ளது. மக்கள் தொடர்ந்து கோரிக்கை வரும் நிலையில், இந்தப் பாதையில் இருந்து சென்னைக்கு தினசரியாக ரயில் இயக்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
தென்காசி, திருநெல்வேலி ரயில் பாதை - Tirunelveli, Tenkasi railway line
திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரையிலான ரயில் பாதை, கடந்த 1902ஆம் ஆண்டு முதல் 1903ஆம் ஆண்டு வரையில் பல கட்டமாக திறக்கப்பட்டது. இயற்கை அழகு கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதிகளான சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம் ஆகியவை வழியாக ரயில்கள் இயக்கப்படுகிறது.
ஐக்கிய முன்னணி ஆட்சி காலத்தின்போது, கடந்த 1997-98ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில், கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்காசி, விருதுநகர் வரையிலான 357 கி.மீ ரயில் பாதையை அகலப்பாதையாக (Broad gauge) மாற்ற 712 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அகலப்பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், தென்காசி, திருநெல்வேலி ரயில் பாதை மூடப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், இந்த வழிப்பாதை மீண்டும் திறக்கப்பட்டது.
சென்னை, தென்காசி நேரடி ரயில் சேவை - Chennai, Tenkasi Direct Trains:
இந்த ரயில்பாதை முழுவதும் மின்சாரமயமாக்கப்பட்டு, 110 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கும் வகையில் ரயில் பாதை மேம்படுத்தப்பட்ட பிறகும் கூட, தென்காசியில் இருந்து சென்னைக்கு இன்று வரை தினசரி நேரடி ரயில் சேவை இயக்கப்படாமல் உள்ளது. கடந்த 1902ஆம் ஆண்டு முதல் 1980களின் பிற்பகுதி வரை, சென்னை எழும்பூரில் இருந்து தென்காசி/செங்கோட்டை வரை நேரடி ரயில் இயக்கப்பட்டது. ஆனால், பின்னர் நிறுத்தப்பட்டது.
இப்போதைக்கு, சென்னை, தென்காசி இடையே வாரத்திற்கு மூன்று சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அது உள்ளூர் மக்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை விருத்தாசலம், மதுரை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி வழியே தினசரி ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டாலும், அவசர நேரத்தில் செல்லும் பயணிகள் தட்கல் முறையில் முன்பதிவு செய்யும்போது 30 நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.
மக்களின் கனவு நிறைவேறுமா?
தினசரி ரயில் சேவை இயக்கக் கோரி தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், "ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைக்கு நேரடி சேவை இல்லை.
வெள்ளிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திரும்பி வருவதற்கு ரயில்கள் இல்லை. இதன் காரணமாக, அதிக விலை கொடுத்து தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு முறை பயணம் செய்வதற்கு ரூ. 2,000 அல்லது அதற்கு மேல் கொடுக்க வேண்டி இருக்கிறது.
தென்காசி மற்றும் திருநெல்வேலியிலிருந்து பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம் வழியாக ரயில் இயக்குவது சென்னை நோக்கி செல்லும் பயணிகளின் பயண நேரத்தை குறைப்பதோடு, இரவு நேரத்தில் மதுரை, விருத்தாசலம் மற்றும் திருச்சிக்கு செல்லும் இணைப்பையும் வழங்குகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினசரி நேரடி ரயில் சேவை எப்போது?
மக்களின் கோரிக்கை குறித்து கேட்டபோது, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "இந்தப் பாதையில் இருந்து சென்னைக்கு தினசரியாக ரயில் இயக்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஆனால், இதுதொடர்பான இறுதி முடிவு உயர் மட்டத்திலேயே எடுக்கப்பட வேண்டும்" என்றார்.