வைகாசி விசாகத்தை முன்னிட்டு, நாளை திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இரண்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

இந்த சிறப்பு ரயில் குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருநெல்வேலியிலிருந்து நாளை(09.06.25) காலை 9.15 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06101) புறப்பட்டு, காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

அதேபோல், மறுமார்க்கத்தில், திருச்செந்தூரிலிருந்து நாளை காலை 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06102) நாளை மதியம் 12.55 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ரயிலின் விவரங்கள்

இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களில், ஒரு 2-ம் வகுப்பு ஏசி பெட்டியும், இரண்டு 3-ம் வகுப்பு ஏசி பெட்டியும், 9 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், நான்கு 2-ம் வகுப்பு பொதுப் பெட்டிகளும், உடைமைகளை கொண்டு செல்லும் லக்கேஜ் பெட்டிகள் இரண்டும் இருக்குமென தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் இயக்கப்படும் ரயில்கள்

இதேபோல், திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 9 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06103), இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

அதேபோல், மறுமார்க்கத்தில், திருநெல்வேலியிலிருந்து நாளை இரவு 11 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்(06104) நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

ரயிலின் விவரங்கள்

இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில்களில், 10 இண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகளும், உடைமைகளை கொண்டுசெல்லும் லக்கேஜ் பெட்டிகள் இரண்டும் என மொத்தம் 12 பெட்டிகளை கொண்டிருக்கும் என தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் எந்தெந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.?

வைகாசி விசாகத்தை முன்னிட்டு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள், பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆழ்வார் திருநகரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் கோயிலில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அங்கு மூத்த குடிமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, இன்று காலையிலிருந்து நாளை காலை 6 மணி வரை, கோயிலில் உள்ள PRO அலுவலகத்தில், அவர்களுக்கு கைப்பட்டை வழங்கப்படுகிறது. இதனை அணிந்துள்ள மூத்த குடிமக்கள் மட்டும் தனி வரிசையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வைகாசி விசாகத் திருவிழா

முருகப் பெருமானுக்கு உகந்த மிகவும் புனிதமான நாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது. முருகனின் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் இந்த நாள் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு, தமிழ் வைகாசி மாதத்தின் ஆங்கில நாளின்படி, ஜூன் 9-ம் தேதி வைகாசி விசாகத் திருவிழா வருகிறது. அதன்படியே நாளை இந்த விழா கொண்டாடப்படுகிறது.