தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி அருகே வினைத்தீர்த்த நாடார்பட்டியில் உள்ளது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருபவர் ஆராதானா.. இந்த மாணவி கடந்த 28.11.2022 அன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் என்னோட பள்ளி வளாகத்தில் தான் அரசு மேல்நிலைப்பள்ளியும் இருக்கு.. எங்க பள்ளி வளாகத்துல இட வசதியே இல்லை. ரெண்டு பள்ளி கூடத்துக்கும் விளையாட்டு மைதானம் கிடையாது. வகுப்பறை வசதியும் கிடையாது. என்னோட தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள இங்க எந்த ஒரு வசதியும் இல்லை. எங்க அப்பா என்னை ஆறாம் வகுப்புக்கு வெளியூரில் உள்ள தனியார் பள்ளி கூடத்துல சேர்ப்பேன்னு சொல்றாங்க, ஆனா எனக்கு அரசு பள்ளியில அதுவும் எங்க ஊரு மேல்நிலைப்பள்ளியிலேயே படிக்கனும்னு ஆசை..
ஆனா இங்க இடவசதி இல்லாமல் எல்லோரும் ரொம்ப கஷ்டப்படுறோம்.. முதலமைச்சர் நினைச்சா நடக்கும்னு சொன்னாங்க. அதான் மனு அனுப்புறேன். எப்படியாது நீங்க எங்க ஊர் அரசாங்க கோவில் இடத்துல மேல் நிலைப்பள்ளியை கட்டி என்னை போலவே எங்க ஊரு மாணவர்கள் எல்லோரும் இங்கேயே படிக்க உதவி செய்யனும் என்று எழுதியிருந்தார். மேலும் எனது கோரிக்கையை நிறைவேற்றி தாங்க என்றும் தனது கைப்பட எழுதி முதல்வருக்கு அனுப்பியிருந்தார். இந்த கடிதம் குறித்து தென்காசி வந்திருந்த முதல்வர் முக ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மேடையிலேயே பேசினார். அப்போது அவர் கூறும் பொழுது, 3 ஆம் வகுப்பு படிக்கும் ஆராதானா என்ற குழந்தை எனக்கு கடிதம் எழுதியுள்ளது. அதை படித்ததும் எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. எத்தகைய நம்பிக்கையை என் மீது அவர் வைத்திருந்தால் இந்த கடிதத்தை எழுதியிருப்பார் என நினைத்து மகிழ்ச்சியடைந்தேன். குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்று இந்த கூட்டத்திலேயே நான் அறிவிக்கிறேன். அதற்கு முதற்கட்டமாக 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இந்த சிறு வயதிலேயே நம்பிக்கையோடு எனக்கு கடிதம் எழுதிய ஆராதனா அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் எனவும் விழா மேடையில் வாழ்த்தினார்.
தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளைவலசையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு 182 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் வழங்கினார். அப்போது நிகழ்ச்சியின் நடுவே விழா மேடையிலேயே சிறுமியின் இந்த கடிதம் குறித்து கூறி அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.