அலையாத்தி காடுகள் அதிக வெப்பம் மற்றும் மழை இருக்கும் இடங்களில், கடல் முகத்துவார உப்பங்கழிகளிலும் வளரக்கூடியவை. இந்த மரங்கள் வெள்ளக்காடு, கண்டல்காடு, மாங்குரோவ் காடு, சதுப்புநிலக் காடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரங்களின் சிறப்பம்சமே வேர்கள்தான். இதன் வேர்கள் சேற்றுக்குள் உறுதியாகப் பிடித்துக் கொண்டு இருக்கும். சில வேர்கள் பூமிக்கு வெளியிலும் நீட்டிக் கொள்கின்றன. சதுப்புநிலப் பகுதிகளில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதால் இந்த வேர்கள் பூமிக்கு வெளியே தலையை நீட்டுகிறது. இந்த அதிசய வேர்கள் சுவாசிக்கும் வேர்கள் என்று அழைக்கப்படுகிறது. 




இந்தியாவில் கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப் பெரிய அலையாத்திகாடாகும். தமிழகத்தில் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள பிச்சாவரத்தில் அலையாத்தி காடுகள் பரந்து விரிந்து உள்ளன. பிச்சாவரத்தில் 12 வகையான மரங்கள் உள்ளன. இதில் சுரபுன்னை, வெண்கண்டல், கருங்கண்டல், நரிக்கண்டல், சிறுகண்டல், காகண்டல், ஆட்டுமுள்ளி, உமிரி, தில்லை உள்ளிட்ட மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் சிறிய செடி முதல் 60 மீட்டர் வரையிலான மரங்களாக உள்ளன. இந்த அலையாத்தி காடுகள் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக பகுதிகளிலும் நிரம்பி காணப்படுகிறது.




தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடற்கரையோரங்களிலும் அலையாத்தி காடுகள் அரணாக விளங்கி கொண்டு இருக்கின்றன. தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரங்கள் தூத்துக்குடி, பழையகாயல் மற்றும் புன்னக்காயல் பகுதியில் அலையாத்தி காடுகள் உள்ளன. சுமார் 800 எக்டேர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த பகுதிகளில் அவிசினியா மெரைனா வகையைை சேர்ந்த மரங்கள் உள்ளன. இந்த வகை மரங்கள் சிறிய மரங்கள் போன்று காட்சி அளிக்கும்.




புன்னக்காயல் அருகே ரைசோபோரா வகையை சேர்ந்த மரங்கள், புன்னை மரங்கள் உள்ளன. அலையாத்தி காடுகள் புயல், ஆழிப்பேரலை, கடல் அரிப்பு, பருவகால மாற்றம் போன்றவற்றில் இருந்து காக்கும் அரணாக அலையாத்தி காடுகள் செயல்படுகிறது.கடலில் இருந்து வரும் அலையின் சீற்றத்தை தடுத்து ஆற்றுப்படுத்தும் தன்மை இந்த மரங்களுக்கு இருப்பதால் இவை, ‘அலை + ஆற்று + மரங்கள் = அலையாத்தி மரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள், மணலை இறுகச் செய்து, கடல் சீற்றம் ஏற்படும் வேளையில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 80 முதல் 100 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி காடுகளுக்கு உண்டு.




இத்தகைய சிறப்பு வாய்ந்த அலையாத்தி காடுகளை பெருக்கும் முயற்சியில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும், அந்த காடுகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விதைகளை சேகரிக்கின்றனர். அந்த விதைகளை முகத்துவாரத்தில் இருந்து சிறிய வாய்க்கால்களை வெட்டி தண்ணீர் கொண்டு சென்று அருகில் உள்ள பகுதிகளில் விதைகளை விதைத்து செடிகளை வளர்த்து வருகின்றனர்.




தூத்துக்குடி நெய்தல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த கெபிஸ்டனிடம் கேட்டபோது, ஆறு, ஓடைகள் கடலில் கலக்க கூடிய முகத்துவாரங்களில் அதிக அளவில் அலையாத்தி காடுகள் வளருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, புன்னக்காயல், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் அலையாத்தி காடுகள் உள்ளன.இந்த அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களின் அடிப்பகுதியில் உள்ள தண்ணீரில் நண்டுகள், இறால்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து வாழும். அதே போன்று பண்டாரி, கொடுவா, மூஞ்சான் உள்ளிட்ட மீன்களும் வசித்து வந்தன. சமீபகாலமாக மாசு காரணமாக இந்த மீன்கள், நண்டுகள் இடம் தெரியாமல் சென்று விட்டன.




அலையாத்தி காடுகள் தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சுடு நீரால் அலையாத்தி காடுகள் அழியும் நிலைக்கு உள்ளதாக கூறும் இவர், சாம்பல் கழிவுகளாலும் அழிந்து வருவதாகவும் கூறுகிறார். இதனால் பல்லுயிர் பெருக்கமும் பாதிக்கப்படுவதாக கூறுகிறார். புன்னக்காயல் பகுதியில் ரைசோபோரா வகை மரங்கள் காணப்படுகின்றன. ரைசோபோரா வகை மரங்கள் பெரியமரமாக வளரக்கூடியவை. இந்த வகை மரங்களை நடவு செய்ய வேண்டும், அதற்கு இல்லாம சுந்தரவன காடுகளில் இருந்தும் பிச்சாவரம் காடுகளில் இருந்தும் அலையாத்திகளை இங்கு நடுவது தவறு எனக்கூறும் இவர் மண்சார்ந்த அலையாத்திகளை வனத்துறை வளர்த்தால் மட்டுமே நல்லது என்கிறார்.




தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனச்சரகர் ஜினோ பிளஸ்ஸில் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் அலையாத்தி காடுகள் பரவலாக காணப்படுகிறது. இந்த காடுகளை வளர்ப்பதற்காக மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் மூலம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி ஆண்டு தோறும் விதைகளை நடவு செய்து காட்டின் பரப்பை அதிகரித்து வருகிறோம். நடப்பு ஆண்டில் இதுவரை 15 எக்டேர் பரப்பில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் சுமார் 70 எக்டேர் பரப்பில் வனத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அலையாத்தி காடுகள் வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஆனாலும் வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த காடுகளை அழியாமல் வனத்துறை மூலம் பாதுகாத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த காடுகளை வனத்துறைக்கு மாற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.விரைவில் அலையாத்தி காடுகள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்கிறார்.