தெற்கு ஆசியா மற்றும் இந்தியாவில் அதிகமாக காணப்படும் குருவி வகை தூக்கணாங்குருவி. இவை கூட்டம் கூட்டமாக கூடுகள் கட்டி வாழும் குணம் கொண்டவை. அதிகளவு வயல் வெளிகள், தானிய பயிர்கள் விளைந்து இருக்கும் விவசாய நிலங்கள் அருகே இருக்கும் மரங்களில் தூக்கணாங்குருவி குடுகளை காணமுடியும்.




வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்கும். கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன. இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால் வைக்கோலையும், புல்லையும் முடிச்சு போட்டு கட்டபடும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை, காற்றினால கீழே விழுவதில்லை. முக்கியமாக உறுதியான, பாதுகாப்பான கூட்டை உருவாக்கும் பொறுப்பு ஆண் பறவைகளை சார்ந்தது.




கூட்டம் கூட்டமாக வாழும் இவைகளின் கூட்டத்தில் 20-30 வரை கூடுகள் இருக்கும். ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்து கொள்கின்றன. தூக்கணங்குருவிகள் இரவில் ஒளி தரும் மின்மினிப்பூச்சிகளை எடுத்து ஈரமான களிமண்ணில் வைத்து தன் கூட்டின் சுவற்றில் ஒட்டிவிடும். இதனால் இரவு கூட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும்.




தூக்காணங்குருவிகளை பொறியாளர்கள் என்று கூறும் அளவிற்கு கூடுகள் கட்டும் அழகு அலாதியனது. பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகிலும், தண்ணீர் பரப்பின் மேல் சாய்ந்த மரக்கிளைகளிலும் கூடுகளை அமைப்பிதினை தூக்கணாங்குருவிகள் வழக்கமாக கொண்டுள்ளன. தங்களுக்கான இரை, குடிநீர் என அனைத்து ஒருங்கிணைந்து கிடைக்கும் வகையில் இருப்பிடத்தினை தூக்கணாங்குருவிகள் அமைத்துக்கொள்ளும். பாம்பு, காகம் இவற்றிடம் இருந்து தப்பித்து கொள்ளும் வகையிலும் தங்களது இருப்பிடத்தினை இவ்வாறு தூக்கணாங்குருவிகள் அமைத்துக்கொள்கின்றன. அதிலும் ஆண் தூக்கணாங்குருவிகள் தான் கூடுகள் அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




விவசாய நிலங்களை சுற்றி இருக்கும் கூடுகள், கீச்,கீச் என தூக்கணாங்குருவி எழுப்பு சத்தங்கள் என ஒரு காலத்தில் பரவி இருந்த நிலையில் தொலைத்து தொடர்புத்துறையின் வளர்ச்சி தூக்கணாங்குருவி உள்ளிட்ட பல்வேறு பறவையினங்கள் அழிவை நோக்கி சென்று விட்டன என்பது மறுக்கமுடியாத உண்மை. அதிலும் தூக்கணாங்குருவிகள் இனமும் ஒன்று. 




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் மானவாரி விவசாயம் அதிகம் என்பதால் எளிதில் தூக்கணாங்குருவிகளை பார்க்க கூடிய காலம் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, போதிய மழையின்மை போன்ற காரணங்களால் பெருமளவு விவசாயம் பாதிக்கப்பட்டதால் தூக்கணாங்குருவி கூடுகளை பார்க்க முடியவில்லை. இந்தாண்டு விவசாயம் சற்று அதிகாரித்து உள்ளது. ராபி பருவத்தில் விளாத்திகுளம் பகுதியில் கம்பு, பாசி, சோளம், உளுந்து, மல்லி, மிளகாய், மக்காச்சோளம் என் பயிர்களை விசாயிகள் பயிரிட்டுள்ளனர். மேலும் பரவலாக மழை பெய்து வருவால் விளாத்திகுளம் பகுதியில் பச்சை பசேல் என நிலங்கள் காட்சியளிக்கும் நிலை இருப்பதால் மீண்டும் துக்கணாங்குருவிகள் கூடுகளை பல இடங்களில் காணக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.  




தானிய பயிர்கள் பயிரிட்டுள்ள நிலங்கள் அருகே இருக்கும் சீமை கருவேலமரங்கள், பனைமரங்களில் தூக்கணாங்குருவிகள் தங்களது கூடுகளை அமைத்து  வருகின்றனர். தூக்கணாங்குருவிகள் கூடுகள் அமைப்பதை அப்பகுதியில் உள்ள மக்கள், குழந்தைகள் எல்லோரும் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.