தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி வயது 55. இவர் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது இவர் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பணிக்கு செல்லும் பசுபதி காவல்துறை உயர் அதிகாரிகளால் அடிக்கடி கண்டிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த போது மது அருந்தியதால் அவரை அருகில் இருக்கும் மற்றொரு காவல்நிலையமான ஊத்துமலை காவல் நிலையத்தில் பணிபுரிய காவல்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. ஊத்துமலை காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்ற பின்பும் தொடர்ந்து மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்ததால் காவல்துறை உயர் அதிகாரிகளால் மீண்டும் எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளார். கீழசுரண்டையில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் அதிகாரிகள் எச்சரித்ததால் கடந்த 10 நாட்களாக மது அருந்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மன அழுத்தம் அதிகமான நிலையில் நேற்று காலை தனது வீட்டில் வைத்திருந்த வயலுக்கு தெளிக்கும் களைக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்துவிட்டு மயங்கியதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அவரது உறவினர்கள் கூறியதன் பேரில் தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் எஸ்ஐ பசுபதி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. மேலும் தற்கொலை செய்து கொண்ட உதவி ஆய்வாளரின் மகன் தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் பணியின் பொழுது மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்த உதவி ஆய்வாளரை காவல்துறை உயர் அதிகாரிகள் கண்டித்ததால் மனம் உடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென்காசி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060