தீக்கதிர் நாளிதழின் நெல்லை பதிப்பு அலுவலகம் நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ளது. பதிப்பு அலுவலக தொடக்க விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத்தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, "நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து இந்தியா என்ற கூட்டணி உருவாக்கப்பட்டு தற்போது அந்த கூட்டணி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி பாஜக மத்தியில் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீள்வதற்காக பாஜகவினர் பல்வேறு சாகசங்களை செய்து வருகின்றனர். அந்த சாகசங்கள் அனைத்தும் பாஜகவினருக்கு பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. தற்போது பாராளுமன்றம் ஐந்து நாட்கள் நடைபெறும் என சிறப்பு கூட்டம் ஒன்றை அறிவித்தார்கள். அந்த சிறப்பு கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க எந்த செயலை பாஜகவினர் செய்துவிட்டனர்.? மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டதாக பிரதமர் சாதனையாக பேசிவருகிறார். 1996ம் ஆண்டு மகளிர்கான இட ஒதுக்கீட்டு மசோதா இரண்டு முறை முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. 2011ம் ஆண்டு 33 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இந்த மசோதாவை மக்களவையில் 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த உடனேயே நிறைவேற்றி இருக்க வேண்டும். ஆனால் அதனை பாஜக செய்யவில்லை.
அப்போதே திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை நிறைவேற்ற பலமுறை வலியுறுத்தியும் அதனை பாஜக செய்யவில்லை. அதனை 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றி இருந்தால் மகளிர்கான உரிமைகள் தற்போது கிடைத்திருக்கும். ஆனால் அதற்கு மாறாக ஆட்சி காலம் முடியக்கூடிய கடைசி நேரத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றி உள்ளனர். அதற்கான பலனை 2029 ஆம் ஆண்டு தான் பெற முடியும் எனவும் தெரிவிக்கின்றனர். 33% இட ஒதுக்கீட்டை உணர்வுப்பூர்வமாக பாஜக நிறைவேற்றவில்லை. இதனை மோடி நாங்கள் செய்த சாதனையாக குறிப்பிட்டு வருகிறார். மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையரை செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். தொகுதி மறுவரையரை என்பது எல்லைகளை மாற்றி அமைப்பது என்பது வேறு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தொகுதி மறுவரையரை செய்யப்பட்டால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளான தமிழகம் கேரளா ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் நிலை உருவாகும். ஆனால் வட மாநிலங்களில் இன்னும் மக்கள் தொகை கட்டுப்பாடு இல்லாமல் உள்ளதால் அங்கு தொகுதி மறுவரையரை செய்யும்போது அதிகமான தொகுதிகளின் எண்ணிக்கை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இப்படி தொகுதி மறுவரையரை செய்வது நியாயமாக இருக்காது. எல்லைகளை மாற்றி அமைப்பது தான் நியாயமான தொகுதி மறுவரையாகும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையரை செய்யப்படுவது தென் மாநிலங்களில் உரிமைகளை பறிக்கும் செயலாகும்.
இந்தியா கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகளை பாஜகவினர் உருவாக்கி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரான இந்தியாவை சொல்லக்கூடாது என்பதற்காக இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்ற முயற்சித்து வருகிறார்கள். ஆனால் அந்த முயற்சி எடுபடாமல் போனது. தற்போது பாரத் என்ற பெயர் மாற்றம் முயற்சி எடுபடாமல் போனதால் அதனை கைவிட்டு விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியா கூட்டணியில் இல்லை என்ற அவதூறு பிரச்சாரத்தை பாஜகவினர் மேற்கொண்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கூட்டணி போன்ற ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்டது. 2024ல் உருவாகியுள்ள இந்தியா கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றியாக தான் நாங்கள் பார்க்கிறோம். இந்தியா கூட்டணி 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அரசை வீழ்த்தும். தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி குழாயடி சண்டையை விட மோசமான சண்டையை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாமலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை பேசுவதும், அவர்கள் அண்ணாமலையை பற்றி பேசுவதும் தரம் தாழ்ந்த செயலாக உள்ளது. அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் குறைந்தபட்ச அருகதை கூட பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இல்லை. அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களை பற்றி அண்ணாமலை அவதூறாக பேசி வருகிறார். இவருக்கு குறைந்தபட்ச அரசியல் நாகரீகம், பண்பாடு கூட தெரியவில்லை. ஆர்எஸ்எஸ்இன் பயிற்சி பெற்ற அடையாளமாக அண்ணாமலை திகழ்கிறார்" என தெரிவித்தார்.