தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ள யானை பாலம் அருகே உள்ளது சிற்றாறு.  தென்காசி நகராட்சியிலுள்ள குற்றால மலையில் உற்பத்தியாகும் ஆறாகும். இங்கு குளித்து மகிழ உள்ளூர் மக்கள் மட்டுமின்றி  சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் செல்வர். இந்த நிலையில் நேற்று மாலை ஆற்றுப்பகுதியில் செங்கோட்டை, புளியங்குடி மற்றும் தென்காசி பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் நான்கு பேர் மது அருந்தியுள்ளனர். அப்பொழுது கூடுதலாக மது வாங்குவதற்காக அதில் இருவர் மதுக்கடைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் இருவர் மட்டும் மதுபோதையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்பொழுது செங்கோட்டை கதிரவன் காலனியை சேர்ந்த அரிகரன் ( வயது 23 ) என்னும் வாலிபர்  மது போதையில் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.


மற்றொரு நண்பர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்தும் முடியாமல் நீரில் மூழ்கியதாக தெரிகிறது.


இந்த சூழலில் கடைக்கு சென்ற மற்ற இருவரும் வர அரிகரன் நீரில் மூழ்கியது தெரிய வந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து அவரது நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.  தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  தொடர்ந்து ஆற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.   இருப்பினும் இரவு நேரமானதால் தேடும் பணியை நிறுத்திய தீயணைப்பு துறையினர் கரை தேடும் பணியை விட்டு விட்டு கரை திரும்பினர்.


தொடர்ந்து இன்று காலை முதல் இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக 36 மணி நேர தேடுதலுக்கு  பின் இளைஞர் அரிகரனின் உடலை சடலமாக மீட்டனர். வாலிபரின் உடலை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நண்பர்களுடன் குளிக்க சென்ற நிலையில் மதுபோதையில் வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் இரண்டு நாள் தேடலுக்கு பின் உடல் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இளைஞரை காணாமல் இரண்டு நாட்களாக தண்ணீரில் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.