தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ளது வடகரை பகுதி. இங்கு பாறைகளில் கடந்த சில  வாரங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று நின்றுள்ளது. இதனை  அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வீடியோ எடுத்த நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  செங்கோட்டை அருகே உள்ள வடகரை, மேக்கரை பகுதிகளில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரியும் நிலையில், சிறுத்தையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த பகுதியில் மக்கள் பாதுகாப்பாக நடமாட வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.


இந்த  நிலையில் கடந்த மாதம் 7 ஆம் தேதி மேக்கரை அருகே உள்ள வடகரை ரஹ்மானியாபுரம் குடியிருப்பு பகுதியில்  காஜா மைதீன், அப்துல்காதர் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்திற்குள் புகுந்து  இரண்டு பசுமாட்டை சிறுத்தை கடித்த நிலையில், ஒரு பசு மாடு உயிரிழந்தது, மற்றொரு பசு மாடு பலத்த  காயமடைந்தது. அதன்பின்னர் அம்மாத இறுதியில் வடகரை  அடவி நயினார் அணைக்கு அருகே டேம்ரோடு பகுதியை சேர்ந்த ஹனிபா என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டியையும் அடித்துக் கொன்றது.


இதனால் அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.  மேலும் உடனடியாக சிறுத்தையை பிடித்து அடர் வனப்பகுதியில் விடவேண்டும் எனவும் வனத்துறையினருக்கு கோரிக்கையும் விடுத்தனர்.  இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காலவர், வேட்டைத்தடுப்புக்காவலர் அடங்கிய தனிக்குழுவினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். குறிப்பாக சிறுத்தை ஊருக்குள் புகாத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வனக் குழுவினர் அந்த பகுதியில் முகாம் மிட்டுள்ளதாகவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் வடகரை, மேக்கரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த  இடங்களில் சிறுத்தை கால் நடைகளை தாக்கி வரும் நிலையில் மனித உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி தற்போது மாவட்ட வன அலுவலர் தலைமையில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது. அதன்படி  அடவி நயினார் அணை அருகே ஒரு கூண்டும்,  அன்பு இல்லம் செல்லும் பாதையில் ஒரு கூண்டும் என இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டு அதில் ஆடுகளை கட்டி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்தும் தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதோடு வன  விலங்குகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். 


ALSO READ | The Goat Twitter Review : தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்