வனத்துறையும், குற்றாலம் அருவியும்:


தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ளது குற்றாலம். மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்தும் ஒரு காலத்தில் மக்களின் பயன்பாட்டில் இருந்தது. காலப்போக்கில் பழத்தோட்ட அருவி, சிற்றருவி வனத்துறை வசம் சென்றது. அதனைதொடர்ந்து மெயினருவி, ஐந்தருவி ஆகியவையும் வனத்துறை எல்லைக்குள் சென்றது. இந்த நிலையில் சமீப காலமாக பழைய குற்றாலம் அருவியும் வனத்துறை வசம் சென்றதாக செய்திகள் வெளியாகிவருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து சுற்று சூழலை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகத்திடமிருந்து தற்காலிக சோதனை சாவடிக்கான அனுமதி கடிதத்தை வனத்துறை பெற்றுள்ளது. 


போராட்டங்களை முன்னெடுக்க முடிவு:


பழைய குற்றால அருவியானது பழமையான அருவியாகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சீசன் காலகட்டங்களில் விரும்பி நீராடக் கூடிய அருவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பழைய குற்றால அருவி இருக்கின்ற இடமானது வனத்துறை கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பகுதியாக உள்ளதால் பழைய குற்றால அருவி வனத்துறைக்கு சொந்தமானது என பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. மேலும் தற்போது பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பழைய குற்றால அருவி வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 


அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் மதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ராம உதயசூரியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் வாயிலாக பழைய குற்றால அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது. மேலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற உள்ளதாகவும், மேலும் நீதிமன்றங்களை நாட உள்ளதாக  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.




வனத்துறை கோரிக்கையும், மக்கள் எதிர்ப்பும்:


முன்னதாக பழைய குற்றாலம் அருவி அமைந்துள்ள இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ல காப்புக்காடு எல்லைப் பகுதிக்குள் உள்ளதால் அதனை வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் அந்த சம்பவத்தை காரணமாக கூறி வனத்துறை தங்கள் வசம் பழைய குற்றாலம் அருவியை கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும் காப்புக்காட்டு பகுதியில் சுற்றுச்சுழல் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும் வனத்துறையினர் இந்த  நடவடிக்கையை மேற்கொள்ள அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. அதோடு இந்த அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் வந்து விட்டால் 24 மணி நேரமும் மக்கள் குளிப்பதற்கு தடை ஏற்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதோடு சுற்றுலா பயணிகளை நம்பி கடை நடத்தும் வியாபரிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.