தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே செட்டியூர் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் கருணாகரன். இவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது காவலாளியிடம் பேச்சிமுத்துவிடம் சொல்லிவிட்டு சென்ற நிலையில் 30 ஆம் தேதியன்று வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி உடனே கருணாகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சென்னையில் இருந்து கிளம்பி 31 ஆம் தேதி வந்து பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த தங்கம் மற்றும் வைர நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. உடனடியாக இது குறித்து கருணாகரன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அதோடு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதுடன் அருகே இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதே போன்று பாவூர்சத்திரம் பகுதியில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இச்சூழலில் அதிதொழில் நுட்ப உதவியோடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை குருவிதுரையை சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் கணேசன் (39), கீழப்பாவூர் முருகேசன் என்பவரது மகன் சங்கரராமன் (36), தஞ்சாவூர் எம்சி ரோடு அண்ணாமலை நகரை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் ரமேஷ்(42), மற்றும் கோயம்புத்தூர் ரத்தினபுரியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் செந்தில்குமார் (50) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர், மேலும் அவர்களிடமிருந்து காணாமல் போன 157 கிராம் தங்க நகைகள், 2 லட்சத்து 50 ஆயிரம் பணம், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் 7 செல்போன்கள் என மொத்தமாக 20 லட்சம் மதிப்புடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
தொடர்ச்சியாக இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை மதுரை, கோவை, கரூர், ,திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தேடி கைது செய்ததோடு சொத்துக்களை கைப்பற்றி இரண்டு பாரிக்குற்ற வழக்குகளை கண்டுபிடித்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கல் வழங்கினார். மேலும் காவல் சரகத்தில் உள்ள பொதுமக்கள் வீட்டினை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்லும் போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும், மேலும் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. கடந்த மாதம் பூட்டிய வீட்டில் கொள்ளை போன சம்பவத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நகைகள் மற்றும் பணத்தை போலீசார் மீட்டு கொடுத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.