தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்பொழுது சபரிமலை சீசன் இறுதி காலம் என்பதால் மகர விளக்கு தரிசனத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று விட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்கள் தவறாமல் குற்றாலத்தில் வந்து புனித நீராடி விட்டு தங்களது வீடுகளுக்கு தேவையான அல்வா, சிப்ஸ், மஸ்கோத் அல்வா, பேரிச்சம்பழம் உள்ளிட்டவைகளை வாங்கிச் செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் குற்றாலத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தரமற்ற முறையில் அல்வா மற்றும் மஸ்கோத் அல்வா, பேரிச்சம்பழம், சிப்ஸ் உள்ளிட்டவைகள் தரம் குறைந்து தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது, மேலும் உணவுபாதுகாப்பு துறைக்கு தகவல் சென்றதை தொடர்ந்து பல்வேறு கட்டமாக ஆய்வு செய்தனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கெட்டுப்போன சிக்கன், மீன், கலப்பட பதநீர் என தொடர்ச்சியாக சுகாதாரமற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சோதனைகளை நடத்தியதில் டன் கணக்கில் பேரிச்சம்பழம், இரண்டு டன் மஸ்கோத் அல்வா, ஒரு டன் சிப்ஸ் உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்து அழித்தார். இந்த நிலையில் மீண்டும் குற்றாலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நாக சுப்பிரமணியன், காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திருமலைவாசன் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது குற்றாலம் பேரருவிக்கு செல்லும் பாதையில் உள்ள ஒரு பழக்கடை குடோனில் சோதனை மேற்கொண்டார். அப்பொழுது அங்கு பெட்டி பெட்டியாக மினரல் ஆயில் தடவப்பட்ட சுமார் 1100 கிலோ பேரிச்சம்பழம் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக அவைகளை பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றி குற்றாலம் - பழைய குற்றாலம் சாலையில் உள்ள குற்றாலம் பேரூராட்சி சொந்தமான உரக்கடங்கில் கொட்டி பினாயில் ஊற்றி அழித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்று தரமற்ற பொருட்களை விற்பனை செய்து வருவதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இது போன்று உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பதோடு இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.