தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம்  பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகில் "FAIFA" என்ற பிரபல ஐஸ்கிரீம் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருவதாக தெரிகிறது. மேலும் இந்த கம்பெனியை கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சார்ந்த அன்சாரி என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம் தரமற்ற  முறையில் தயாரிக்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களைக் கொண்டு ஐஸ்கிரீம்கள் தயாரிக்கப்படுவதாகவும், மேலும் தமிழ்நாட்டில் தயாரித்து கேரள மாநில பெயர்களை அச்சிட்டு ஒட்டி இங்கிருந்து அங்கு கொண்டு செல்லப்படுவதாகவும், முறையான அனுமதி இன்றி இந்த ஐஸ்கிரீம் நிறுவனம் இயங்கி வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நாகசுப்பிரமணிக்கு புகார்கள் வந்துள்ளது. அதன்படி தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நாகசுப்பிரமணி ஐஸ்கிரீம் கம்பெனியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது அங்கு சுகாதாரமற்ற நிலையில் உரிய பாதுகாப்பு மற்றும் ஆடைகள், கையுறைகள் உள்ளிட்டவைகள் அணியாமல் தரையில் வைத்து ஐஸ்கிரீம் பெட்டிகளை அடுக்கி வைத்திருப்பதும்,  ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு ரசாயன பொருட்கள் உள்ளிட்டவைகள் மற்றும் பல்வேறு பெயர்கள் கொண்ட லேபில்களையும் அச்சடித்து தனியாக வைத்திருப்பதையும் அவர் கண்டறிந்தார். பின்பு தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களை ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்தார். அதன்படி சுமார் 270 லிட்டர் ஐஸ்கிரீமை பறிமுதல் செய்து அழித்தார். அதோடு அக்கடை உரிமையாளரிடம் உரிய விசாரணை மேற்கொண்டதோடு தரமற்ற முறையில் விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தார்.  




இதே போன்று தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக  உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி உணவின் தரம் குறித்து  சோதனை செய்து வருவதோடு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக இறைச்சிகள், இனிப்பு, காரம், என அனைத்து பொருட்களும் சோதனை செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் குற்றாலம் பகுதியில் தரமற்ற முறையில் அல்வா மற்றும் மஸ்கோத் அல்வா, பேரிச்சம்பழம், சிப்ஸ் உள்ளிட்டவைகள் தரம் குறைந்து தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது, அப்போது சோதனை நடத்தியதில் டன் கணக்கில் பேரிச்சம்பழம், இரண்டு டன் மஸ்கோத் அல்வா, ஒரு டன் சிப்ஸ் உள்ளிட்டவர்களை பறிமுதல் செய்து அழித்தார். அதற்கு முன்னதாக நடைபெற்ற பல்வேறு கட்டமாக ஆய்வில் கெட்டுப்போன சிக்கன், மீன், கலப்பட பதநீர் என தொடர்ச்சியாக சுகாதாரமற்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விற்பனை செய்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  நம்பி வரும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் உணவுப்பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் எச்சரித்து அறிவுரை கூறி செல்லும் நிலையில் இது போன்ற தரமற்ற பொருட்கள் விற்கப்படுவது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் இது போன்ற செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவர்களது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் மக்கள்.