'அண்ணாமலைக்கு வெள்ளரிக்காய் கொடுக்கலாம்.. வெள்ளை அறிக்கை தர முடியாது' - ஆர்.எஸ்.பாரதி பேட்டி

அண்ணாமலைக்கே வெள்ளரிக்காய் வேண்டுமானால் வாங்கி கொடுக்கலாம் வெள்ளை அறிக்கை எல்லாம் கொடுக்க முடியாது என ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.

Continues below advertisement

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்பாமல் புறக்கணிப்பதைக் கண்டித்து நெல்லை டவுண் ஈசானமுக்கில் தி.மு.க.சார்பில் மத்திய அரசின் நிதி பங்கீடு குறித்து பொதுமக்களுக்கு விவரிக்கும் வகையில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மக்களுக்கு அல்வா கொடுக்கும்  நூதன போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் உள்ளிட்ட திரளான திமுகவினர் பங்கேற்றனர்.

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறும் பொழுது, "மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், மோடி அரசு மதுரையில் எய்ம்ஸ் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியது. ஆனால் ஐந்து ஆண்டு காலம் முடிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மோடி எய்ம்ஸ் கல்லூரிக்காக நட்டிய ஒற்றைச் செங்கலை வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து திமுக அரசு, ஆட்சிக்கு வந்துவிட்டது.

எய்ம்ஸ் கல்லூரிக்கு நிதி:

மோடி அரசிற்கு கொஞ்சமாவது உணர்வு இருந்தால், தமிழக மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார் என்ற சொரணை ஏற்பட்டு கொஞ்சமாவது நிதி வழங்கி எய்ம்ஸ் கல்லூரியை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் மோடி அரசின் ஆயுட்காலமே முடியப்போகிறது. இதுவரையிலும் மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு நிதி ஒதுக்கவில்லை.

நிதி வரவில்லை:

வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெய்த மழை வெள்ளத்தில் நெல்லை, தூத்துக்குடி மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். தமிழக மக்கள் பேராபத்திற்கு உள்ளானார்கள் என நாடே கண்ணீர் விட்டது. நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வந்து படம் போட்டார். கோவிலுக்கு சென்ற அவர் உண்டியலில் பணத்தை போடாதீர்கள்  என சொல்லிவிட்டு சென்றார். வெள்ள நிவாரணத்திற்காக சல்லி பைசா கூட தரவில்லை. ராஜ்நாத் சிங் வந்து நேரடியாக மழை வெள்ளத்தை பார்வையிட்டார். மத்திய அரசின் அதிகாரிகள் நேரில் வந்து வெள்ளத்தை பார்வையிட்டனர். ஆனால் இதுவரை எந்த நிதியும் மத்திய அரசால் தமிழகத்திற்கு ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்திற்கு தரவேண்டிய உரிமையை தான் முதலமைச்சர் மத்திய அரசிடம் கேட்கிறார். அவர்களிடம் கெஞ்சவில்லை. ஏறத்தாழ 6 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி பணத்தை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ளது 2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே. மத்திய அரசு ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே தமிழகத்திற்கு கொடுக்கிறது. மத்திய அரசிடம் தமிழகம் பிச்சை கேட்கவில்லை. அதிகாரத்துடன் உரிமையே தான் கேட்கிறது. எங்களிடமிருந்து பறித்து வைத்துள்ள 71 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்தை கொடுங்கள் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.


வெள்ளை அறிக்கை:

உத்திரபிரதேசத்தில் ஒரு ரூபாய் செலுத்தும் வரிக்கு இரண்டு ரூபாயாக திருப்பிக் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் செலுத்தும் ஒரு ரூபாய் வரிக்கு 29 பைசா மட்டுமே தரப்படுகிறது. எய்ம்ஸ் தருகிறோம் என்று சொல்லி அல்வா கொடுத்து விட்டார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கும் மத்திய அரசு அல்வா கொடுத்து விட்டது. மத்திய அரசு கொடுத்த அல்வாவிற்கு பதில் சொல்லும் விதமாக அல்வாவிற்கு பெயர் பெற்ற திருநெல்வேலியில் இருந்து மோடிக்கு இந்த தேர்தலில் மக்கள் அல்வா கொடுக்கப் போகிறார்கள்.

ஒரு இடம் கூட இந்த தேர்தலில் பாஜகவிற்கு கிடைக்காது என்பதை உணர்த்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது பித்தலாட்டம். ஊரை ஏமாற்றும் செயல். தமிழகத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தமிழகத்திற்கு தான் கொடுக்க வேண்டும் என்பதுதான் உரிமை. நிர்மலா சீதாராமனின் கணவரே இந்தியாவின் பொருளாதாரம் என்பதை தெளிவாக சொல்லியுள்ளார். புருஷன் பேச்சை கேட்டு நிர்மலா சீதாராமன் நடந்தால் நல்லது. அண்ணாமலைக்கே வெள்ளரிக்காய் வேண்டுமானால் வாங்கி கொடுக்கலாம். வெள்ளை அறிக்கை எல்லாம் கொடுக்க முடியாது. திருநெல்வேலியில் அதிகம் வெள்ளரிக்காய் கிடைக்கிறது. வரும்பொழுது நான் வாங்கிக் கொண்டு வருகிறேன் என தெரிவித்தார்

Continues below advertisement
Sponsored Links by Taboola