தென்காசி மாவட்டம் செங்கோட்டை திமுக நகர் மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி திமுக கவுன்சிலர்கள் உட்பட அதிமுக, பாஜக உட்பட அனைத்து கவுன்சிலர்களும் ஆணையரிடம் கடந்த டிசம்பர் மாதம் மனு அளித்தனர்.  குறிப்பாக நகர்மன்ற தலைவர் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்வது இல்லை. கமிஷன் நோக்கத்தில் தான் அவரது செயல்பாடுகள் உள்ளது என அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக புகார் கூறி வந்தனர். இந்நிலையில் தான் இன்று செங்கோட்டை நக மன்ற கூட்டரங்கில் வைத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மொத்தம் 24 கவுன்சிலர்களில் திமுகவை தவிர அதிமுக பிஜேபி சேர்ந்த 13 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கெடுத்துள்ளனர். மேலும் வாக்கெடுப்பின் போது பார்வையாளர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு கூட்டரங்கில் அனுமதி இல்லை என கூறப்பட்ட நிலையில் கவுன்சிலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


11:30 மணிக்கு கூட்டரங்கில் கவுன்சிலர்கள் கூடிய நிலையில் 12 மணி வரை நேரம் கொடுக்கப்பட்டது. இந்த  நிலையில் 50% கவுன்சிலர்கள் வராத நிலையில் கூட்டத்தில் கோரம் இல்லை எனவும் இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக நகராட்சி ஆணையாளர் சுகந்தி அறிவித்து சென்றார். இதனால் மீண்டும் ஓராண்டு காலத்திற்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கவுன்சிலர்கள் அங்கிருந்த அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் ஆணையரிடம் இருக்கும் எங்களிடம் வாக்கெடுப்பு நடத்துங்கள் எனக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


இதே போன்று கடந்த வாரம் நெல்லை மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கூட்டம் நடைபெற்றது. ஆனால் 55 வார்டுகளில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என ஒட்டுமொத்த கவுன்சிலர்களையும் திமுக நிர்வாகிகள் இன்ப சுற்றுலா அழைத்து சென்றனர். அதன்படியும் கூட்டத்தில் கோரம் இல்லாததால் தீர்மானம் தோல்வியடைந்ததாகவும், இன்னும் ஓராண்டு காலத்திற்கு மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது, அவரே மேயராக தொடர்வார் எனவும் மாநகராட்சி ஆணையர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை தாண்டி இது போன்று கட்சிக்குள் மோதிக்கொள்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே கட்சி பிரச்சினைகளை தாண்டி மக்கள் பிரச்சினைகளுக்காக கவுன்சிலர்கள் குரல் கொடுத்து அதனை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,