தென்காசி வாக்குமையம்:
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. குறிப்பாக தென்காசி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிக்குட்பட்ட வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை யு எஸ்பி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனையொட்டி கல்லூரி வளாகம், கல்லூரியை சுற்றி என ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த ஆறு தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் யு எஸ் பி கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நாளை (04.06.24) செவ்வாய்க்கிழமை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
தென்காசி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான கமல் கிஷோர் தலைமையில் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனையொட்டி அங்கு துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் தென்காசி மாநகர மற்றும் மாவட்ட போலீசார், தேர்தல் முகவர்கள் மற்றும் கட்சி தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். இது தவிர மாவட்டம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலீசார் தயார் நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மேஜைகளும், முகவர்கள் நியமனமும்:
வாக்கு எண்ணும் அறையில் ஒவ்வொரு மேசைக்கும் ஒரு வாக்கு எண்ணுகை உதவியாளர், வாக்கு எண்ணுகை கண்காணிப்பாளர், ஒரு நுண்பார்வையாளர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் அறையில் வேட்பாளரின் பிரதி நிதியாக வாக்கு எண்ணுகை இடமுகவர் செயல்பட வேண்டும். ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் மற்றும் 1 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜை என மொத்தம் 15 மேசைகள் உள்ளது. 6 சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்து ஒரு வேட்பாளருக்கு 90 முகவர்களும், தபால் வாக்கு எண்ணும் அறையில் 12 முகவர்களுமாக மொத்தம் ஒரு வேட்பாளருக்கு 102 முகவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் தினத்தன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையானது சட்டமன்ற தொகுதி வாரியாக காலை 6.45 மணி முதல் ஒவ்வொன்றாக தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள், மற்றும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும். காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியானது துவங்கப்பட உள்ளது.
தொகுதிக்கான சுற்றுகள்:
தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 19 சுற்றுகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வாக்குகள் 21 சுற்றுகளிலும், சங்கரன்கோவில் தொகுதி வாக்குகள் 20 சுற்றுகளிலும், வாசுதேவநல்லூர் தொகுதி வாக்குகள் 20 சுற்றுகளிலும், கடைய நல்லூர் தொகுதி வாக்குகள் 24 சுற்றுகளிலும், தென்காசி சட்டமன்ற தொகுதி வாக்குகள் 24 சுற்றுகளிலும் எண்ணப்பட உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் எந்த மேசையில் வாக்குகளை எண்ணுவது என்பது குறித்து தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 5 மணிக்கு கணினி முறை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் ஒவ்வொரு மேசையும் வெப்-கேமரா வாயிலாக கண்காணிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மக்களவை தொகுதி இராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், வாசுதேவநல்லூர், ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணியினை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் அர்ச்சனா தாஸ் பட்நாயக் என்ற தேர்தல் பார்வையாளர் ஒடிசா மாநில குடிமைப்பணியிலிருந்தும், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர் தொகுதி வாக்கு எண்ணும் பணியினை கண்காணிக்க பொதுப்பார்வையாளராக டோபேஸ்வரர் வர்மா என்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.