ஏறக்குறைய 95 ஆண்டுகளுக்கு மேலாக தலைமுறை தலைமுறையாக மலைவாழியல் வழிமுறைகள் தவிர வேறு எதையுமே தெரிந்திடாத மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.


தேயிலைத் தோட்ட நிறுவனம் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் மாஞ்சோலை பகுதியை காப்புக் காட்டாக அறிவிக்கப்பட்டதன் விளைவாக குத்தகை காலம் 2028 ஆம் ஆண்டு முடிந்து தமிழக அரசிடம் அந்த நிறுவனம் நிலத்தை ஒப்படைக்க வேண்டிய சூழலில் அங்கு பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது பணி மாறுதல் என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்து கொண்டு வருகிறது. 100 ஆண்டு காலமாக தேயிலை தோட்டத்தின் வாழ்வாதாரத்தை நம்பிய மக்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் வெளியேற்றப்பட உள்ளனர். அந்த மக்களின் வாழ்வாதார உரிமையை மீட்டெடுக்கவும், அரசின் தேயிலை நிறுவனமான டேங்க் டி எ மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும் என்றும் கட்டாய விருப்ப ஓய்வை ஏற்றுக் கொள்ளக் கூடாது என கோரிக்கைகளை முன் வைத்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஊத்து என்ற பகுதியின் 11 வது வார்டில் கவுன்சிலரான ஸ்டாலின் என்பவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை வேண்டும் என அந்த பகுதி மக்களின் சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்த வீடியோவில் கவுன்சிலர்  பேசியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் இருந்து கவுன்சிலர் பேசுகிறேன்.  நாங்கள் 95 ஆண்டுகாலமாக  மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். 4 தலைமுறையாக வாழ்ந்து வருகிறோம். நாங்கள் பிறந்து வளர்ந்தது என சொந்த ஊரே மாஞ்சோலை தான். இங்கிருந்து நாங்கள்  வெளியே சென்று பிழைக்க எதுவும் கிடையாது. இந்த வனத்திற்கு நாங்கள் ஒரு பாதுகாவலராக இருக்கிறோம். இப்படி இருக்கும் சூழலில் 2028 இல் குத்தகை காலம் முடியும் என சொன்னார்கள். ஆனால் இப்போது 31 ஆம் தேதியுடன் வி ஆர் எஸ் கொடுத்து விட வேண்டும் என்று நோட்டீஸ் போட்டு உள்ளனர். இந்த நோட்டீஸை போட்டவுடனே  காடுகள், வீடுகள் என  மக்களின் கூக்குரலாக தான் உள்ளது. சாப்பிட கூட முடியாமல் கண்ணீர் விட்டு பெண்கள் அழுகின்றனர்.


நாங்கள் கண்ணீர் கூட விட முடியாமல் மனதிற்குள் அழுது கொண்டிருக்கிறோம். பல சமுதாயத்தினர் அடுத்தடுத்த வீடுகளில் இருக்கின்றனர். ஆனால் நாங்கள் சாதி பார்க்காமல் ஒரே குடும்பமாக  வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி சூழலில் வெளியே போக சொன்னால் நாங்கள் எங்கு சென்று வாழ்வது? எங்களுக்காக பல தரப்பினரும் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றனர். காட்டுவாசி போன்று வாழ்ந்து  கொண்டிருக்கிறோம். எங்களது குடியுரிமையை விட்டு நாங்கள் எங்கேயும் போக முடியாது. சொந்த வீடு,  ஊரு மாஞ்சோலை தான். எனவே அனைவரின் குரலும் முதல்வரின் குரலுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கண்ணீருடன் அவரை நம்பிக் கொண்டிருக்கிறோம். எனவே தேர்தல் முடிவுக்கு பின் இதனை அரசு எடுத்து நடத்தும் என்ற வெற்றி செய்திக்காக  காத்திருக்கிறோம்” என்று வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.