தென்காசி மாவட்டம் கொட்டாகுளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து தற்போது தென்காசியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் வினித் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்த குஜாராத் மாநிலத்தை சேர்ந்த நவீன் பட்டேல் தென்காசி பகுதியில் 20 ஆண்டுகாலமாக மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் கிருத்திகா பட்டேல், வினித் என்பவரும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதியன்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் காலமாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் பொங்கல் அன்று கோயிலுக்கு சென்று வீடு திரும்பும் போது இவர்களது காரை வழிமறித்து பெண் வீட்டார்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகவும் குற்றாலம் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தமிழக முதல்வர் பிரிவிற்கு புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து குற்றாலம் காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியுள்ளனர். பேச்சுவார்த்தை முடிந்து கிருத்திகாவை அவரது கணவர் வினித் காரில் அழைத்து சென்ற போது தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில்  அவர்களின் காரை வழிமறித்து கிருத்திகாவின் தாய் தந்தை மற்றும் உறவினர்கள் துரத்த ஆரம்பித்தனர். பின் வினித்தை பெண் வீட்டார் தாக்கிவிட்டு கிருத்திகா பட்டேலை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும், குஜராத் பகுதியில் உள்ள ஒரு கோவில் வைத்து கிருத்திகாவுக்கும், அவரது உறவினரான மைத்ரிக் பட்டேல் என்ற நபருக்கும் திருமணம் நடைபெற்றது போன்ற வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் திடீர் திருப்பமாக  கிருத்திகா பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலாகியது. அதனை தொடர்ந்து வினித்துடன் கிருத்திகா பேசும் ஆடியோ ஒன்றும் வெளியானது. அதில் வினித்திடம் இந்த வழக்கை வாபஸ் வாங்கு என்று அது தான் இருவருக்கும் நல்லது. எந்த பிரச்சினையும் இல்லை நீயும் நல்லா  இருக்க முடியும் நானும் நல்லா இருக்க முடியும் என்று கூறுகிறார்.  நீ எங்கு இருக்கிறாய், நேரில் வா என்று கூறுகிறார் வினித். ஆனால் வழக்கை மட்டும் வாபஸ் வாங்க சொல்லி பேசுகிறார் கிருத்திகா. இந்த ஆடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கிருத்திகாவை மீட்பதற்காக தனிப்படை போலீசார் குஜராத் விரைந்து அங்கு கிருத்திகாவை தேடி வருகின்றனர்.


Tenkasi Kidnap | இளம்பெண் கடத்தலில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்… வெளியான புதுவீடியோ...| Kiruthika Video


இப்படி, நாளுக்கு நாள் இந்த வழக்கில் பல்வேறு பரபரப்புகள் அரங்கேறி வரும் சூழலில், தற்போது மீண்டும் கிருத்திகா பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், வினீத்தின் குடும்பத்தார் என்னை வைத்து எனது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். இதை தெரிந்து கொண்ட  நான் எனது கணவரான மைத்ரிக் பட்டேல் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்து தன்னை அழைத்துச் செல்லும்படி கோரிக்கை வைத்ததாகவும், அதனால்தான் தனது பெற்றோர்கள் தன்னை அழைத்து சென்றதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. பணத்திற்காக வினீத் குடும்பத்தினர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கிருத்திகா வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.