தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முற்றிலும் இலவசமாக விமானம் மூலம் சென்னைக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர்.




தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை திருமதி. ரமா தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வதற்கும் உறவினர் வீட்டு சடங்குகளுக்கு செல்வதற்கும் பள்ளிக்கு விடுமுறை எடுப்பதைக் கண்டார். இதனை தொடர்ந்து மாணவர்களின் வருகையை உறுதி செய்யவும், நன்றாக படிக்க வைக்கவும் முடிவு செய்தார் ஆசிரியர் ரமா. 




இதனை தொடர்ந்து இப்பள்ளியில் பயின்று வரும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களிடையே பள்ளிக்கு விடுப்பு எடுக்காமலும் நன்றாக படிக்க வேண்டும் அவ்வாறு படிக்கும் விடுப்பு எடுக்காமல் வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்வேன் என பள்ளியின் டீச்சர் ரமா கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வகுப்பறையில் தெரிவித்து உள்ளார்.




இதற்கு கைமேல் பலன் கிடைத்து மாணவர்கள் விடுமுறை எடுப்பது குறைந்தது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக விடுமுறை எடுக்காமலும் நன்றாக படிக்கவும் ஆரம்பித்த 12 மாணவ மாணவிகளை தேர்வு செய்தார். வகுப்பில் உள்ள 12 மாணவர்களையும் விமானத்தில் முற்றிலும் இலவசமாக சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்தார்கள். எனவே மாணவர்களை சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்து பள்ளி செயலர் ஏபிசிவீ. சண்முகம் அவர்களிடம் ஆலோசித்ததில் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்ததுடன் பயணச்செலவில் பள்ளி நிர்வாகமும் பங்களிப்பதாக கூறினார்கள். மேலும் ஒரு நன்கொடையாளர் உதவி அளிக்க முன்வந்தார்.




அதனை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் உற்சாகமாக பறந்த மாணவர்கள்,அங்கு வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரீனா கடற்கரை , தமிழ்நாடு முதல்வர் அவர்களின் நலத்திட்ட புகைப்படக் கண்காட்சியையும் கண்டு களித்தனர்.




சென்னையில் வசிக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மாரியப்பன், ஆவுடையப்பன்,   ரகுபதி,ஆறுமுகசாமி , திருமதி ஆறுமுகசாமி,சங்கரபாகம், கெளரி சங்கர், ரவீந்திரன் , திருமதி ரவீந்திரன் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு , பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்தி என அன்பில் திக்குமுக்காட வைக்க உற்சாகத்தில் கரைபுரண்டனர் பள்ளி மாணவர்கள். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து முத்து நகர் விரைவு ரயிலில் தூத்துக்குடி திரும்பினர். மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் பெருமகிழ்ச்சி அடைந்து ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.




 சுற்றுலாவில் மாணவர்களுடன்  தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியைகள் ரமா, சரஸ்வதி மற்றும் அந்தோணி ஆஸ்மின் ஆகியோர் சென்றிருந்தனர்.இப்பள்ளியில் தற்போது மாணவர்களிடையே விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையுடன் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் வருவதும் போட்டி போட்டு படிப்பதும் அதிகரித்து வருகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்