மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ளது நெல்லை மற்றும் தென்காசி மாவட்டம். குறிப்பாக மலைப்பகுதியையொட்டியுள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது காட்டு விலங்குகள் புகுவதோடு விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர், இது ஒருபுறமிருக்க அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதும், மக்களை அச்சுறுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.


தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய பகுதியான கீழக்கடையம் பகுதியில்  நேற்று அதிகாலை காட்டுப்பன்றி ஒன்று சுற்றி திரிந்து வந்துள்ளது. அப்போது அதிகாலையில் கீழக்கடையம் பகுதியை சேர்ந்த ராஜ்குட்டி என்பவருடைய மகன் பள்ளி மாணவன் பரசுராம் அதிகாலை தெரு பைப்பில் வீட்டிற்கு தண்ணீர் பிடிப்பதற்காக குடத்துடன் வெளியே வந்துள்ளார். அங்கே மறைந்திருந்த காட்டுப்பன்றி மாணவன் பரசுராமை தாக்கியதில் தொடை மற்றும் கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மாணவனின் சத்தம் கேட்டு வந்தவர்கள் காட்டுப்பன்றியை விரட்டி விட்டுள்ளனர்.  தொடர்ந்து மாணவனை அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவனுக்கு தொடையில் 2 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.




இந்த நிலையில் தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவருடைய மகள் வைஷ்ணவி என்ற மாணவியையும் காட்டுப்பன்றி தாக்கி உள்ளது. மேலும் 3 பெரியவர்களையும் தாக்கிய   நிலையில் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த  வனத்துறையினர் காட்டுப்பன்றியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.  குறிப்பாக கடந்த மாதம் கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி 3 பேரை கடித்து குதறியது. அதே போல அதற்கு ஒரு சில மாதத்திற்கு முன்பு கோட்டைவிளைப்பட்டி அருகே பெண் ஒருவரை கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார். இது போன்று வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து பொதுமக்கள் தாக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த சூழலில் காட்டுப்பன்றி மாணவர்கள் உட்பட 5 பேரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.








 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண