தூத்துக்குடியில் பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலாபுஷ்பாவின் மிரட்டல் பேச்சால், அவரின் வீடு மற்றும் கார்மீது  கல்வீசி தாக்குதலில் ஈடுப்பட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




தூத்துக்குடியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம் சிறுபான்மை அணியினர்  சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா பேசுகையில், “தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய கீதாஜீவன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தேவையில்லாமல் பேசி வருகின்றார். அண்ணாமலை படித்து மெரிட்டில் பாஸ் செய்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர் அவர் தவறு செய்த குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜராக்குவது தான் வழக்கம் உங்களை போல  குற்றவாளியாக நீதிமன்றத்தில் நின்றது கிடையாது. எனவே எங்கள் தலைவர் அண்ணாமலையை பற்றி பேச உங்களுக்கு தகுதி கிடையாது எங்கள் தலைவர் ஒன்றும் உங்கள் தலைவர் போல் கிடையாது, அதனை மனதில் வைத்து பேசுங்கள்.




நீங்கள் முட்டையில் ஊழல் செய்தீர்கள் அதனை எங்கள் தலைவர் சுட்டி காட்டினார் அதற்கு அவன் இவன் என்று என்று அனாகரியமாக பேசுவது தவறு எங்களுக்கும் பேச தெரியும். ஆனால் எங்கள் கட்சியில் அப்படி எங்களுக்கு சொல்லிதரவில்லை. சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து தூத்துக்குடி மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளீர்கள். சுமார்ட் சிட்டி பணிகள் முடிவடையவில்லை,பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டவில்லை என்னதான் தொகுதி மக்களுக்கு செய்தீர்கள்.




எனவே உங்கள் வேலைகளை பார்க்காமல் உங்கள் தவறுகளை சுட்டி காட்டும் எங்கள் தலைவர் அண்ணாமலையை தேவையில்லாமல் பேசினால் வெளியில் வர கால்கள் இருக்காது பேச நாக்கு இருக்காது” என்று திமுக அமைச்சர் கீதாஜீவனுக்கு சசிகலா புஷ்பா பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார். சசிகலா புஷ்பாவின் அதிரடி பேச்சினால் திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.




இந்நிலையில், தூத்துக்குடி பி & டி காலனியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில் மர்ம கும்பல்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதனால் வீட்டில் உள்ள ஜன்னல்கள், கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவரது காரும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சம்பவம் தூத்துக்குடியில் காட்டு தீ போல் பரவியது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சசிகலா புஷ்பா இல்லத்தின் முன்பு குவிந்தர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும், காலதாமதம் ஏற்படுத்தினால் பல்வேறு போராட்டங்கள் நடத்த போவதாகவும் தமிழகம் முழுவதும் பாஜகவினர் இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகவும் சசிகலா புஷ்பாவிற்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பாஜக தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர்.




இச்சம்பவத்தால் திமுக பாஜகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தூத்துக்குடி நகர் முழுவதும் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.முன்னாள் எம்.பி பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு கார் தாக்கப்பட்டதில் தூத்துக்குடி மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீதுகாவல் நிலையத்தில் புகார். அளிக்கப்பட்டுள்ளது.




 தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீடு தாக்கப்பட்டது தொடர்பாக பாஜக பிரச்சார பிரிவு மாவட்டச் செயலாளர் ரத்தினராஜ் என்ற கனி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இசக்கி ராஜா, ராமகிருஷ்ணன், திமுக பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் பெற்றுக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




பாஜக துணைத் தலைவர் சசிகலா புஸ்பா வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் காலதாமதம் படுத்தினால் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த விஷயத்தில் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.




இந்நிலையில் இன்று காலைக்குள் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாவிட்டால் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களுடன் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாடம் செய்ய உள்ளதாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் அறிவித்து இருந்தார். இந்நிலையில் சிப்காட் காவல்நிலையத்தில் அளித்து இருந்த புகாரின் அடிப்படையில் திமுக கவுன்சிலர்கள் 3 பேர் மற்றும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது