நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் தனது தொகுதி மேம்பாட்டு பணிகளுக்காக நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திருநெல்வேலி கால்வாய், கோடகன் கால்வாய் ஆகியவற்றை மேம்படுத்துவது, கால்வாய்களில் லைனிங் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருநெல்வேலி கங்கைகொண்டானை அடுத்த அலவந்தான் குளம் முதல் ராஜபதி வரை எட்டுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மேய்ச்சல் நிலமாக இருக்கக்கூடிய 600 ஏக்கரை சூரிய சக்தி மின்சாரம் தயாரிப்பதற்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மக்கள் போராடி வரும் நிலையில் அவர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் கூறும் பொழுது, ”திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து விளக்கினார். அதிமுகவுடனான கூட்டணி இன்றும், நாளையும் கூட்டணியில் தான் இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக திமுகவுடன் கூட்டணி என சிவி சண்முகம் எப்படி சொல்ல முடியும், அது அவரின் சொந்த கருத்தாக இருக்கலாம். கட்சியின் கருத்து வேறு. அதை முடிவு செய்ய வேண்டியது பாஜக கட்சியும் அதிமுக கட்சியும் தான்.. திமுகவுடன் கூட்டணி வைப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை, எந்த முகாந்திரமும் இல்லை. பாஜக மாநில தலைவரோடு மூத்த நிர்வாகிகள் தலைவர்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஏப்ரல் மாதம் அண்ணாமலை துவங்கக்கூடிய யாத்திரை வெற்றிகரமாக நடக்கும்” என்றார்.