விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் விக்கிரகங்கள் வைக்கப்படக்கூடிய இடங்களில் சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.


விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு:


இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்., குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் சுமார் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


வட மாநில தொழிலாளர்களால் நெல்லை பாளையங்கோட்டை அடுத்த கிருபா நகர் பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்தில் ஆய்விற்காக பல்வேறு மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்.


காவல்துறை கெடுபிடி:


இந்த நிலையில் விநாயகர் சிலை கூடத்திற்கு வருவாய் துறை, காவல் துறை சீல் வைக்க போவதாக தகவல் பரவியது. இதனை அடுத்து விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இந்து அமைப்பு நிர்வாகிகள் குவிய தொடங்கினர். அதே வேளையில் போலீசாரும் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது, ஏற்கனவே விநாயகர் சிலைகளை பெறுவதற்கு இந்து அமைப்பு நிர்வாகிகள் வட மாநில தொழிலாளர்களிடம் பல்லாயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ள நிலையில் தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கான பணிகளை தொடங்கினர்.




10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் அட்வான்ஸ் கொடுத்தவர்கள் ஆட்டோ மற்றும் டெம்போ வேன்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு எடுத்து செல்லும் பணிகளை தொடங்கினர். வழக்கமாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் வந்து விநாயகர் சிலைகளை இந்து அமைப்பு நிர்வாகிகள் வட மாநில தொழிலாளர்கள் இடமிருந்து பெறுவது வழக்கம்.


ஆனால் காவல்துறையின் கெடுபிடி காரணமாக குறிப்பிட்டு நாளுக்கு முன்னதாகவே விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிக்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கெடுபிடி கொடுக்கும் சூழல் உருவானால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தப் போவதாக இந்து முன்னணி நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண