நெல்லை பாளையங்கோட்டை மறைமாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்ட நிகழ்வு பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளி மைதானத்தில் 2 நாட்களுக்கு முன் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.


தொடர்ந்து நிகழ்ச்சியில்  உரையாற்றிய  அவர், தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள சனாதானம் குறித்து பரபரப்பாக பேசியிருந்தார். அவர் பேசும் போது ”சனாதனம் என்பது இந்துக்களுக்கு எதிரானதாகும். 4 சதவீதம் பேர் மட்டுமே இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மீதமுள்ள 96 சதவீம் பேர் அடிமை வாழ்க்கைதான் வாழ்கின்றனர். 1935- ம் ஆண்டுக்குப்பின் லாடு மெக்காலே பிரபுதான் அனைவருக்கும் சமமான கல்வியை கொண்டு வந்தார். இந்த நாட்டில் சமூக நீதிக்கு முதலில் வித்திட்டவர்கள் அருட்தந்தையர்கள்தான். ஏசு சபைகள் முடக்கம், மணிப்பூரில் 300 தேவாலயங்கள் இடிப்பு,  இதற்கு காரணம் ஏசு சபையினர் அனைவருக்கும் கல்வி கொடுப்பதுதான் இதனை தடுப்பதுதான் சனாதனம். இதனால்தான் தமிழகத்தில் முதல்வர் உள்பட அனைவரும் எதிர்க்கின்றனர். அய்யா வைகுண்டர் சாதிய, மதரீதியான அடக்கு முறைகளை எதிர்த்து 800 ஆண்டுகளுக்கு முன்னரே குரல் கொடுத்தார். உன் மனச்சாட்சியே கடவுள் என கூறினார். சனாதனத்தை எதிர்த்தார். தமிழ்நாட்டில் சட்டத்தின் படி ஆட்சி நடக்கிறது. இங்கு திராவிட மாடல் ஆட்சி நடப்பதால்தான் அனைத்து தரப்பினரும் பாதுகாப்பாக வாழ முடிகிறது. எல்லோருக்கும் எல்லாம் என கல்வி பொருளாதாரம் ஆகியவற்றில் நாம் இன்று வளர்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் அருட்தந்தையர்களின் சேவைதான்" என பேசியிருந்தார்.


ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தைத் தொடர்ந்து சனாதானம் என்பது மத ரீதியாக இந்து மதம் சார்ந்தது என்றாலும் அதன் நடவடிக்கை இந்துக்களுக்கே எதிராக இருப்பதாக திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கிறிஸ்தவ சமூகத்தை உயர்த்தி பேசியதோடு, சனதானம் 4 சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்படுவதாக கூறிய கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. குறிப்பாக அப்பாவு சனாதானம் குறித்து பேசிய அதே நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவரும், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். எனவே பாஜகவின் முக்கிய பிரமுகரை மேடையில் வைத்துக்கொண்டே சபாநாயகர் சனாதனம் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். இது போன்ற சூழ்நிலையில் சபாநாயகர் அப்பாவு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி சார்பில் அதன் மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் நிர்வாகிகள்  பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.




அதில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பொன்விழா ஆண்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு சனாதானம் குறித்து பொய்யான செய்திகளை கூறி இந்து மதம் குறித்து இழிவாக பேசி இருதரப்பினர் இடையே கலவரம் மூட்டும் வகையிலும் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கெட்ட எண்ணத்தோடும் பேசி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.


“அவர் பேசிய கருத்தை முன்னிலைப்படுத்தி இஸ்லாமிய அமைப்புகளும், சமூக வலைத்தளத்தில் இந்து மதத்தை இழிவு படுத்தி பேசி வருகின்றனர், எனவே மத வெறுப்புணர்வோடு பேசிய சபாநாயகர் அப்பாவு மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் வலியுறுத்தி உள்ளனர். சனாதானம் விவகாரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.