புதிய தமிழகம் கட்சியின் பூத் கமிட்டி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் பொழுது, "தமிழ்நாடு அரசால் நடத்தப்படக்கூடிய மதுபான கடைகளால் நாளுக்கு நாள் மதுப்பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஏற்கனவே பலகட்ட போராட்டம் நடத்தியுள்ளோம்.  அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 15ஆம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் இதில் உடன்படக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அழைக்கவிருக்கிறோம்.


தென்தமிழகம் என்று சொன்னாலே தொடர்ந்து பல வருடங்களாக சாதிய மோதலுக்கு அடையாளமாக விளங்கியது. மீண்டும் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கக்கூடிய வகையில் 3 மாதங்களுக்கு முன்பு நாங்குநேரியில் சக பள்ளி மாணவர்கள் ஒரு பள்ளி மாணவர் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கழுகுமலையிலும் ஒரு மாணவர் தாக்கப்பட்டார். நேற்று முன்தினம்  நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் மீது அந்த பகுதியில் வந்த 6 பேரால் தாக்கப்பட்டது மட்டுமின்றி சிறுநீர் பாய்ச்சப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது.  வளர்ந்த தமிழ் சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது, மிருகத்தனமான இது போன்ற சம்பவங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தென் மாவட்டங்களை சுற்றியே இதுபோன்று தொடர் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 


காவல்துறையின் ஒட்டுமொத்தமான மெத்தனப் போக்கும், கையாலாகாத தனமும் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது, எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வெறும் வாய் அளவில் சமூக நீதி பேசிக்கொண்டு, முற்போக்குத்தனத்தை பேசிக்கொண்டு இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும், அரசும் இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளக் கூடாது. கிருஷ்ணசாமி தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் ஜாதிய வன்முறைகளை கண்டித்து நவம்பர் 18ஆம் தேதி கண்டன பேரணி  நெல்லையில் நடத்த இருக்கிறோம்.  நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் சம்பவம் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியது. சமூக நல்லிணக்கத்தை தென் மாவட்டங்களில் உண்டாக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரும் அதே வேளையில் எஸ்சி எஸ்டி வழக்கைக்கூட பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற சம்பவங்கள் அதுபோன்ற வழக்கை பயன்படுத்த வழிவகை செய்கிறது” எனத் தெரிவித்தார் . காவல்துறை நினைத்தால் இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்திட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்