தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில்  நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் 2010-ம் ஆண்டு 2 லட்சத்து 8 ஆயிரம் வாகனங்கள் இருந்தன. தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 15 ஆயிரமாக உயர்ந்து உள்ளது.


அதிகமான வாகனங்கள் இருப்பதால் விபத்துக்களும் அதிகமாகவே இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் சாலை பாதுகாப்பு குறித்த கூட்டம் நடத்தும்போது மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து நடத்தவேண்டும். அப்போது மக்களின் கோரிக்கைகள் எளிதில் அரசுக்கு கொண்டு செல்ல முடியும். சாலை விபத்துக்களால் மக்கள் பலவிதமாக பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு இருசக்கர வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டது. அதே போன்று கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு 1255 விபத்துக்கள் நடந்து உள்ளன. இதில் 390 உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகமான விபத்துக்கள் நடக்கும் மாவட்டங்களில் தூத்துக்குடியும் ஒன்றாக உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.





தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் தரமானதாக அமைக்க வேண்டும். தமிழகத்தில் நம்மை காக்கும் 48 மணிநேரம் திட்டத்தில் 58,191 பேர் காப்பாற்றப்பட்டு உள்ளனர். இதற்காக தமிழக அரசு ரூ.501 கோடி செலவு செய்து உள்ளது. விபத்து அதிகம் நடைபெறும் இடங்களாக தமிழகத்தில் 1337 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 70 இடங்கள் உள்ளன. விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற விபத்துக்களை குறைப்பதற்காக 400 பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுபோன்ற பயிற்சி பெற்ற பொறியாளர்களை இங்கு இடமாற்றம் செய்யவேண்டும்.


வாகனங்கள் பாதுகாப்பாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இருசக்கர வாகன விபத்துக்களில் 2 பேர் மட்டுமே செல்லவேண்டும். அதனை அதிகாரிகள், போலீசார் அனுமதிக்க கூடாது. சாலை விதிகள் தெரியாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் அளிக்க கூடாது. ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் கூடுதல் கட்டுப்பாடுகள் வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 




மேலும் சாலை விபத்துக்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்படும். இதில் குறைவான விபத்துக்கள் உள்ள மாநகராட்சிக்கு ரூ.15 லட்சமும், குறைந்த விபத்து உள்ள மாவட்டத்துக்கு ரூ.25 லட்சம், 2-வது மாவட்டத்துக்கு ரூ.13 லட்சம், 3-வது மாவட்டத்துக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டில் முதல் பரிசை தூத்துக்குடி மாநகரம், மாவட்டம் பெறவேண்டும் என்றார்.




அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தூத்துக்குடி மாவட்டத்தில் 386 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலை, முக்கிய சாலைகள் 334 கிலோ மீட்டர், இதர சாலைகள் 1582 ஆக மொத்தம் 2 ஆயிரத்து 305 கிலோ மீட்டர் சாலைகள் தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 175 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. தூத்துக்குடி முதல் மணியாச்சி வரை 21 கிலோ மீட்டர் தூர சாலை அமைப்பதற்கு 108 எக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இதற்காக ரூ. 28 கோடியே 53 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக தனியாக வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. தெற்கு வீரபாண்டியபுரத்தில் இருந்து சிப்காட் வளாகத்துக்கு ரூ.19.9 லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி-கன்னியாகுமரி சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் ரூ.5 கோடியே 66 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது.




திருச்செந்தூர் கோவிலுக்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆய்வு செய்து உள்ளோம். இது தொடர்பாக முழு திட்ட அறிக்கை தயாரித்து விரைவில் பணிகள் தொடங்கப்படும். மீளவிட்டான் ரெயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வருகிறது. ஜூலை மாதத்துக்குள் அந்த பணிகள் முடிந்துவிடும். தூத்துக்குடி மாநகராட்சி சாலை மையப்பகுதியில் தடுப்புகள் காரணமாக மண்திட்டுகள் ஏற்படுகிறது. இதனால் மெக்கானிக்கல் துடைப்பான் மூலம் மணல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.




தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 25 தரைப்பாலங்களில் 13 தரைப்பாலங்களை மேம்பாலமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வல்லநாடு பாலம் தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. டெண்டர் விடப்பட்டு, அந்த பணி விரைவில் தொடங்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடி எடுக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு முன்னுரிமை அளித்து உள்ளது. மாநகராட்சி அருகே 10 கிலோ மீட்டர் சுற்றளவில் சுங்கச்சாவடி இருக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.


அதன் அடிப்படையில்தான் மத்திய மந்திரி 60 கிலோ மீட்டர் தூரத்துக்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என்று கூறினார். இதனால் அதிகாரிகள் மூலம் கணக்கெடுத்து வருகிறோம். 60 கிலோ மீட்டருக்கு உள்ளே இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.