தரமான கல்வி கொடுக்கும் குறுக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் பயிலும் மாணவர்கள் மழைக்காலத்திற்கு முன்பாகவே கட்டிட வசதி ஏற்படுது தர பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் குருக்கத்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1975 ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளியில் அத்திப்புலியூர், குருமணாங்குடி, நீலப்பாடி, கூத்தூர், செருநல்லூர், ஆத்தூர், கீழ்வேளூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் உட்பட 1031 மாணவ-மாணவிகள் 1-ம் வகுப்புமுதல் 12-ம்வகுப்புவரை படித்து வருகின்றனர்.

 

ஆண்டுதோறும் அரசு பொது தேர்வில் 95% தேர்ச்சியும் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் 100% மதிப்பெண்களையும் இப்பள்ளி தக்க வைத்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டாலும் 500 மாணவர்கள் மட்டுமே கல்வி பயிலும் வகையில் வகுப்பறை தான் உள்ளது. இதனால் 6, 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவியர்கள் மரத்தடியில் அமர வைத்து பாதுகாப்பற்ற முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

 



 

இதுகுறித்து பெற்றோர்கள் தெரிவிக்கும்போது, பள்ளியில் 29 ஆசிரியர்கள் பணியாற்றிய நிலையில் தற்போது 18 ஆசிரியர்கள் இருந்தாலும் கற்பித்தல் நன்றாகவே உள்ளது. ஆண்டுதோறும் சேர்க்கை அதிகரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு போதிய கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும், பழுதடைந்த வகுப்பறைகளை பழுது நீக்கம் செய்ய வேண்டும், குடிநீர் மற்றும் கழிவறைகளை முறைப்படுத்த வேண்டும், பள்ளி தொடங்கும் நேரத்திலும் பள்ளி முடியும் மாலை நேரங்களிலும் காவல்துறையினர் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும், மரத்தடியில் படிக்கும் மாணவர்களுக்கு மழைக்காலத்துக்கு முன்பாகவே தற்காலிகமாக வகுப்பறைகள் பாதுகாப்புடன் ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் அதிக பணம் கொடுத்து தனியார் பள்ளியில் குழந்தைகளை படிக்க வைப்பதை விட அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இக்கால கட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கிட வேண்டும் என பெற்றோர்களும் பள்ளி மேலாண்மை உறுப்பினர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் பெற்றோர்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.