நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் நான்கு வழி சாலையில் மது அருந்தி கொண்டிருந்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அஜின் ஜோஸ் என்பவருடன் இருந்த வாலிபரை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.  அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் தெரிவித்தார்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலையில் மணக்குடி அருகே வட மாநில தொழிலாளியை ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல நேற்று இரவு சுங்காங்கடை அருகே நான்கு வழி சாலையில் மேலும் ஒரு கொலை நடந்துள்ளது. குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த அஜின் ஜோஸ் என்பவர் அவரது நண்பர் அசோக் மற்றும் வேறு ஒரு வாலிபருடன் நான்கு வழி சாலையில் மூன்று பேராக சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி அஜின் ஜோஸ் என்பவர் உடன் இருந்த வாலிபரை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். அவருடன் வந்த அசோக் என்பவரை பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அஜின் ஜோஸ் என்பவர் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்பு உடையவர் என்பது தெரியவந்தது. மேலும் இறந்தவர் யார் என்பது கைதான அசோக்கிற்கும் தெரியவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ் பி ஹரி கிரண் பிரசாத் அப்பகுதியை பார்வையிட்டார். மேலும் கொலை செய்ய பயன்படுத்தி கத்தி கிடைக்காத நிலையில் கத்தியின் உறை கிடைத்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் அங்கு ஏராளமானோர் இரவு நேரங்களில் மது அருந்த வரும் பகுதியாக உள்ளது. இந்த கொலை தொடர்பாக அப்பகுதி மக்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 





 

மேலும், கொலையாளி யார், எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக இந்த கொலை நடந்தது உள்ளிட்ட எந்த விபரமும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை செய்து விட்டு அஜின் ஜோஸ் தப்பி ஓடியதாக அசோக் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய கொலையாளியை பிடிக்க மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

 

அண்மை காலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.