தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு பள்ளிக்கூடங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பான் மற்றும் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கி வரவேற்று பேசினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட் நிறுவன உதவி துணைத்தலைவர் தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 14 அரசு பள்ளிக்கூடங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பான், கம்ப்யூட்டர்களை வழங்கி பேசினார்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசும் போது, "நம் நாட்டில் தற்போது யார் வேண்டுமானாலும் படிக்கலாம். முயற்சி செய்தால் எந்த வேலைக்கும் செல்லலாம். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் மட்டுமே படிக்க முடிந்தது. மற்றவர்களுக்கு படிக்கும் உரிமை இல்லை. பெண்கள் படிக்க முடியவில்லை. அந்த நிலையை மாற்ற பெரியார் நடத்திய போராட்டத்தால் அனைவருக்கும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாதி, மதம், பொருளாதாரம் காரணமாக யாருக்கும் படிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாது.
பெண்கள் பொருளாதார பிரச்சினையால் இடைநிற்றலை தவிர்க்க, புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மாணவ, மாணவிகள், அரசு மற்றும் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்ற படித்து உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும். இந்த பள்ளிக்கூடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.படிப்பு மட்டுமின்றி மாணவர்களின் ஆர்வம் என்ன என்பதை அறிந்து செயல்படுத்த வேண்டும். விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும். மாணவர்கள் எதையும் புரிந்து படிக்க வேண்டும். உங்களுடன் இருப்பவர்களை புரிந்து கொண்டு அன்பு செலுத்துங்கள். மனிதநேயத்தோடு இருந்தால் சண்டைகள் வராது. ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனம் மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கு செல்லும் போது, உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை தகுதி உள்ள மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, நமது எம்.பி. மக்களின்கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றி வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். தமிழக மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்களாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்களில் நிர்வகிக்கும் பொறுப்புகளில் தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் இந்த காலத்தில் நன்றாக படிக்க வேண்டும். முதல்-அமைச்சரின் எதிர்பார்ப்பை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும். புத்தகங்களை நன்கு புரிந்து படித்து அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரும் சான்றோர்களாக உயர்ந்த பதவிகளுக்கு வர வேண்டும்" என்றார்.