தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு 2,039 பயனாளிகளுக்கு ரூ.17.63 கோடி மதிப்பிலான கடனுதவிகள், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள், போட்டுகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.




விழாவில் கனிமொழி எம்பி பேசும்போது, “விவசாயிகள், கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. மக்கள் வாழ்க்கையை உயர்த்தி கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகள், தொழில் தொடங்குவதற்கான உதவிகளை கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து அளித்து வருகின்றன. நமது வாழ்க்கையின் முக்கியமான அங்கத்தை இந்த கூட்டுறவு சங்கங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.




இதனை நமது அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சில காரணங்களால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. கூட்டுறவு சங்கத்தை உருவாக்கும் அடிப்படை உரிமை என்பது இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையை நமக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கொண்டுவரப்பட்டது தான் அந்த முயற்சி. அந்த உரிமை நமக்கு வேண்டும் என்பதை மறுபடியும் வலியுறுத்தி, அதனை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.




தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 4600 டன் உரம் தேவைப்படுகிறது. அதில் 50 சதவீதத்துக்கு மேல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தான் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதுபோல மாவட்டத்தில் 5.50 லட்சம் குடும்ப அட்டைகள் மாவட்டத்தில் உள்ளன. இதில் 4.70 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகள் மூலமாக தான் பயன்பெறுகிறார்கள். 


குறிப்பாக கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான உதவிகள் இந்த நியாயவிலைக் கடைகள் மூலம் தான் அவர்களை சென்றடைந்தன. பொங்கல் பரிசுகள் அனைத்தும் மக்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் தான் சென்று சேர்ந்தன. அதுபோல வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை வாங்கி, மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கி வருகிறோம். கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகளை மக்கள் பெற்று வாழ்க்கையில் வளம் பெற வேண்டும்” என்றார்.




அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, “கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்து காணப்பட்டன. மக்களின் நகைகள், முதலீடு பணம் காணாமல் போயின. தங்க நகைகளுக்கு பதிலாக பித்தளை நகைகளை வைத்து பித்தலாட்டங்கள் நடைபெற்றன. பல சங்கங்கள் மூடப்பட்டன, முடக்கப்பட்டன. தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டதும் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 924 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், புதிய உறுப்பினர்களுக்கும் உடனடியாக கடன் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.


கூட்டுறவு சங்கங்களில் ரூ.6000 கோடி அளவுக்கு நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ரூ.170 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 2,093 குழுக்களுக்கு ரூ.93 கோடி அளவுக்கு கடன் தள்ளுபடி செய்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது” என்றார் அமைச்சர்.


விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், கூட்டுறவு இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவகாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.