திருநெல்வேலியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவர் இடையே மாறுபட்ட கருத்து நிலவியதால் மாணவ, மாணவிகள் குழப்பமடைந்தனர்.
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக பள்ளி,கல்லூரிகள் செயல்படவில்லை. இதனிடையே வெள்ள நீர் வடிந்த நிலையில் இன்று 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி இன்று முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல் நிவாரண முகாம் அமைக்கப்பட்ட கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வரும் காரணத்தினாலும் அந்த பகுதியின் சூழ்நிலைக்கேற்ப 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பது தொடர்பாக ஏற்ப அந்த தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் கூறியிருந்தார். இப்படியான நிலையில் இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில் மற்றும் ஆடியோவில், மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தார். மேலும் அனைத்து ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து மீண்டும் பள்ளி திறப்புக்கு தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும் தலைமையாசியர்கள் கனமழை பாதிப்பினால் புத்தகம், பாடக்குறிப்பேடு, ஆகியவற்றை இழந்த மாணவர்கள் எண்ணிக்கை விவரம், மழையால் பாதிக்கப்பட்ட பள்ளி கட்டிடம், கழிப்பறை சுற்றுச்சுவர் தொடர்பான விவரங்களை தெரிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து வகுப்புகளுக்கும் இன்று விடுமுறையா அல்லது 1 முதல் 8 வகுப்புகள் வரை மட்டும் விடுமுறையா என மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
தனியார் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்ட அறிக்கையில்,
- 23.12.23 முதல் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
- விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
- எக்காரணம் கொண்டும் எந்தப்பள்ளியும்,எந்த மாணவரையும் பள்ளிக்கு வரவழைக்க கூடாது.
- எல்லாவற்றையும் மீறி பள்ளிக்கு மாணவர்களை வரசொல்லியோ அல்லது பள்ளி திறக்கப்பட்டாலோ மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றால் நீங்களே நேரில் சென்று விளக்கம் தரவேண்டி வரும்.
- மாணவர்களுக்கு விடுமுறை என்கிற செய்தி தவிர விடுமுறையிலும் கூட பள்ளிக்கு வரவைக்கக் கூடாது.
- பேரிடர்காலம் இன்னும் தொடரும் என அரசு நினைப்பதால் விதிகளை மீறி செயல்பட்டு நோட்டீஸ் அனுப்பும் நிலைக்கு யாரும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.