தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்தது தவணை தானே தவிர கூடுதல் நிதி அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


மழை மற்றும் வெள்ளதால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.


இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணை தொகைகளை அறிவித்து முதலமைச்சர் பேசியதாவது: கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக 12,653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு ஹெலிஹாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பெருமழையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் நானும் தலைமைச் செயலாளரும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களோடு காணொலி வாயிலாகவும்,  தொலைபேசி வாயிலாகவும் கண்காணித்து வருகிறோம். கடந்த 19 ஆம் தேதி இரவு பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து  இரண்டு பெரிய வெள்ளப்பாதிப்புகளுக்கு தேவைப்படுகிற நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்கிட கோரிக்கை மனுவை அளித்துள்ளேன். தென் மாவட்டத்திற்கு மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாயை முதலில் வழங்க வேண்டும் என்று  கேட்டுள்ளேன், தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களிடம் வீடியோ கால் மூலமாக முகாம்களில் அவர்களுக்கு செய்து தரப்படும் வசதிகள் குறித்தும், வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவம் குறித்தும் கேட்டறிந்தேன்.  


சென்றடைய முடியாத நிலையில் இருக்கக்கூடிய கிராமங்களில் மக்களின் நிலை பற்றியும், அவர்களின்  மீட்கக் கூடிய அவசர பணி குறித்தும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறாது என்பது குறித்தும் கேட்டறிந்து அந்த பணிகளை விரைவு படுத்த கேட்டுக் கொண்டேன். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள கூடுதல் ஹெலிஹாப்டர்கள் அனுப்பி வைக்கக்கோரி ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன், விமான படையின் 4 ஹெலிஹாப்டர்கள், கடற்படையின் 2 ஹெலிஹாப்டர்கள் மற்றும் கடலோர காவல்படையின் 2 ஹெலிஹாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. பெரு மழை தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதல் ஹெலிஹாப்டர்கள் தேவை என அதிக பட்ச அளவில் ஹெலிஹாப்டர்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அவர்களும் அனுப்பி வைத்துள்ளனர். 


பெருமழை காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கும், கால் நடையை இழந்தவர்களுக்கும்,  விவசாயிகளுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகையாக 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கவும், சேதமடைந்த குடிசைகளுக்கான தொகை 5 ஆயிரத்தை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட  நெற்பயிர் உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேர்  ஒன்றிற்கு 13 ஆயிரத்து 500 லிருந்து 17 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.


பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமாகியிருப்பின் ஹெக்டேர் ஒன்றிற்கு 18 ஆயிரத்திலிருந்து 22 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்கவும், மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு 7400 லிருந்து 8500 ஆக உயர்த்தி வழங்கிடவும், 33 ஆயிரமாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால் நடை உயிரிழப்பு நிவாரணத்தை 37500 ஆக உயர்த்தி வழங்கிடவும், 3 ஆயிரம் ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு நிவாரணத்தை 4 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், முழுமையாக சேதமடைந்த  படகு மற்றும் வலைகளுக்கு  நிவாரணமாக 32 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் பகுதியாக சேதமடைந்த கட்டு மரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 15 ஆயிரமாகவும் வழங்கப்படும். அதிக பட்ச மானியமாக  75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திர படகுகளுக்கு அதிக பட்ச மானிய தொகை 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சமாக  உயர்த்தி வழங்கிடவும். சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதி கனமழையால்  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் பாதிக்கப்பட்ட வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த மாவட்டத்தில் உள்ள இதர வட்டங்கள் தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் பாதிப்பை  கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.


அமைச்சர்களும், அதிகாரிகளும் முழுமையாக இங்கிருந்து மக்கள் காப்பு பணியில் நிச்சயமாக ஈடுபடுவார்கள் என தெரிவித்து கொள்கிறேன் என்றார்.


ஆளுநர் வாரத்திற்கு ஒரு முறை வெளியில் சென்று வருகிறார். அப்படி போகும் போது வாதாடி போராடி தேவையான நிதியை வாங்கி கொடுத்தால் அவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன் என்றார், மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்தது தவணை தானே தவிர கூடுதல் நிதி அல்ல என்றார், மேலும் தென்மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை கடும் பேரிடராக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.