கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அமைந்துள்ளது கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் தையல் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம் என்பவர் ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் மதமாற்றம் செய்யும் விதமாக தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தையல் தைக்கும் போது ஒரு மதத்தை சார்ந்த சின்னத்தை முதலில் தைத்த பிறகே வேலை தொடங்க வேண்டும் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசல்புரசலாக தகவல் வழியாகவே இரணியல் காவல் நிலைய போலீசார் நேற்று கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு மாணவி போலீசாரிடம் கூறும்போது, "தையல் வகுப்பு எடுக்கும் ஆசிரியை பைபிள்தான் நல்ல புத்தகம், பகவத்கீதை கெட்டது என சொல்லுகிறார். மேலும் கதை எல்லாம் சொல்லித்தந்தாங்க.

 



 

ஒரு கிறிஸ்டீனும், சாத்தானும் பைக்கில போய்கிட்டு இருந்தாங்களாம். இந்துவ சாத்தான்னு சொல்லுறாங்க. அப்போது திடீரென ஆக்ஸிடண்ட் நடந்துச்சாம். அப்ப ஒருத்தர் பைபிள் படிச்சுகிட்டு இருந்ததுனால இறந்தவங்க உயிர் பிழைச்சுட்டாங்களாம். துணி தச்சு தந்தாலும் பிளஸ் சிம்பல்தான் தச்சுதருவாங்க. மதியம் சாப்பிட்டதுக்கு அப்புறம் கையை கோர்த்து, முட்டிபோட்டு பிரேயர் பண்ணணும்னு சொன்னாங்க. அப்புறம் சாப்பிடதுக்கு பிறகு பிரேயர் பண்ண கூப்பிட்டாங்க. கிறிஸ்தவ பிள்ளைங்க மட்டும் போனாங்க, நாங்க போகல" என அந்த மாணவி கூறினார்.



 

அரசுப்பள்ளியில் மதமாற்றம் செய்வது பற்றி போலீஸார் விசாரணை நடத்துவதாக தகவல் பரவியதை அடுத்து இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்ணாட்டுவிளை அரசு மேல் நிலைப்பள்ளி முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இன்று இந்து அமைப்பினர் இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 



 

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தியிடம் பேசினோம், "கண்ணாடுவிளை பள்ளியில் நடந்தது சம்பந்தமான தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த தக்கலை மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விசாரணை முடிந்த பின் கிடைக்கும் அறிக்கையை வைத்து ஆசிரியை மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம் பொதுப்படையான விஷயங்கள் குறித்து விவாதிக்கவோ அல்லது உரையாற்றவோ எந்த தடையும் இல்லாத நிலையில் மதம் மற்றும் ஜாதி குறித்த கருத்துக்களை பரப்ப அல்லது பகிரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி குற்றச்சாட்டு உண்மை என தெரியவரும் பட்சத்தில் ஆசிரியை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஏற்கனவே மாணவி லாவண்யா விவகாரத்தை பா.ஜ.க கையில் எடுத்தது போன்று கண்ணாட்டுவிளை அரசுப்பள்ளி மாணவி விவகாரத்தையும் கையில் எடுத்து போராட இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன.