நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து துரை வைகோ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
பத்து வருடமாக எந்த அரசியல் அதிகாரமும் இல்லாமல் மதிமுக இருந்து வந்துள்ளது. தற்போது ராஜ்யசபா தொடங்கி உள்ளாட்சி அமைப்புகள் வரை பல்வேறு பொறுப்புகளில் மதிமுகவினர் உள்ளனர். வெற்றி சதவிகிதத்தில் திமுகவிற்கு அடுத்து மதிமுக தான் உள்ளது. நாம் போட்டியிட்ட இடங்களில் 90% வெற்றி பெற்று உள்ளோம், திமுக தலைமை மறுமலர்ச்சி திமுக மீதும் வைகோ மீதும் நல்ல மரியாதை வைத்துள்ளது. மக்களுக்கு மட்டுமல்ல இந்த இயக்கத்திற்கு திமுக கூட்டணி மிக முக்கியமானதாக உள்ளது என்றார்.
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கிட்டத்தட்ட ஒரு வருடமாக நான் கவனித்த வரை அவர் பேட்டியில் பேசுவதெல்லாம் பகல் வேஷம் என்று தான் சொல்லுவேன், கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுப்பதற்கு தமிழக பாஜக ஏன் போராட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். 10 மாதங்களில் இந்த ஆட்சி பொறுப்பேற்ற காலங்களில் கோவிட் 2ஆவது அலை, வெள்ளபாதிப்பு, பல்லாயிரக்கணக்கான கோடிகள் சேதாரம் ஆகியவைகளுக்கு மத்தியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி நடத்தி வருகிறார். புதிய தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் துபாய் சென்று 132 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தவறு நடக்க கூடாது என தெரிவித்ததோடு அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் முதலமைச்சர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார், அதனால் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, ஊழல் குற்றச்சாட்டு புரிந்தவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மதிமுக தனது கருத்தை முதலமைச்சரிடம் தெரிவிக்கும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்து மக்கள் மனதில் இடம் பெறும் நடவடிக்கையை வருங்காலத்தில் நாங்கள் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்