நெல்லை சரக டிஐஜியாக இருந்த பிரவேஸ் குமார் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த மூர்த்தி நெல்லை சரக புதிய டிஐஜியாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி நெல்லை சரகத்தின் 49- டிஐஜி யாக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர், இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஏழு மாத காலமாக நெல்லை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி தற்போது நெல்லை சரக துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். தமிழக அரசு காவல் துறையில் என்ன எதிர்பார்க்கிறதோ அதனை முழுமையாக அக்கறையும், ஆர்வமும் கொண்டு முழு மூச்சாக இந்த பணிகளை நிறைவேற்றுவோம்.
நெல்லை சரகத்தை பொறுத்தவரை 4 மாவட்டங்களும் மிகவும் Sensitive ஆன மாவட்டங்கள். இங்கு கொலைகள், சாதிய மோதல்கள், பாலியல் குற்றங்கள், சிறுவர்களுக்கெதிரான குற்றங்கள், அதே போல போக்குவரத்து, கஞ்சா ஒழிப்பு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை மிகச்சிறப்பாக நிறைவேற்ற முழுமனதுடன் சிறப்பாக பணியாற்றுவேன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னுடைய அலைபேசியில் தொடர்பு கொண்டு சரகம் தொடர்பான எந்த குறைகளையும் தெரிவிக்கலாம். மிகச் சிறப்பான காவல் கண்காணிப்பாளர்கள் 4 மாவட்டங்களிலும் பணியாற்றுகின்றனர். அவர்கள் ஒத்துழைப்போடு பொதுமக்கள் குறைகள் தீர்த்து வைக்கப்படும். மாணவர்களிடையே சாதிய மோதல்கள் குறித்த வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. குறிப்பாக காவல்துறை சட்ட நடவடிக்கைக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு இது போன்ற எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக காவல்துறை உயர் அதிகாரிகள் பள்ளி கல்லூரிக்கு சென்று மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
அதே போல அங்குள்ள ஆசிரியர்களையும் சந்தித்து இது போன்று இனி நடக்கக்கூடாது என அவர்களுக்கும் எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது. சிறார் குற்றங்களை பொறுத்தவரை மிக எளிமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி அருகே போதைப்பொருள் விற்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் காவல்துறை உறவு மேம்பட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 9443168256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.